சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

காற்றாலை மின்சார உற்பத்தி அளவை நெறிபடுத்த புதிய தொழிற்நுட்ப திட்ட ஒப்பந்த ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி அளவை நெறிபடுத்தும் புதிய தொழிற்நுட்பத்திற்கான திட்ட ஒப்பந்த ஆணையை பெங்களூர் நிறுவனத்திடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

கடந்த ஆண்டு, 2019-ல் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி லண்டன் பயணத்தின் போது, அங்கு இயக்கத்திலுள்ள ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்தினை பார்வையிட்டார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் அத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக செயல்பட்டு, மின் கட்டமைப்பு அலகுகளுக்கு ஏற்ப, காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி அளவை நெறிபடுத்தும், சோதனை ரீதியான திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்த ஆணையை பெங்களூருவில் உள்ள Enzen Global Solutions Private Limited என்ற நிறுவனத்திற்கு முதலமைச்சர் நேற்று வழங்கினார்.

இந்த புதிய தொழில்நுட்பமானது அதிக காற்றாலை மின் உற்பத்தியை மின் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதோடு மின் கட்டமைப்பின் அலகு வேறுபாடுகளையும் நெறிபடுத்த உதவும். இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.