தற்போதைய செய்திகள்

காவலர்களுக்கே இந்த நிலை என்றால், மக்களின் நிலைமையை எண்ணி மனம் பதறுகிறது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சென்னை,

காவலர்கள் மிரட்டப்படும், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி காவலர்களுக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலைமையை எண்ணி மனம் பதறுகிறது என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:-

சாலை பாதுகாப்பு

கொள்கை விளக்கக்குறிப்பு பக்கம் 25ல், மாநிலத்தில் 2021ம் ஆண்டில் மட்டும் 14.60 லட்சம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும், 55,682 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும், காயமடைந்தவர்கள் 55,996 எனவும், உயிரிழந்தவர்கள் 15,384 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினை நவீன மயமாக்க அம்மா அவர்களின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது 2010-2011-ம் ஆண்டில் இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 159 கோடியே 22 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், 2020–2021-ம் ஆண்டு இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 405 கோடியே 68 லட்சம் ரூபாயாகும்.

காலியாக உள்ள தீயணைப்போர் பணியிடங்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டுமெனில், 25 கி.மீ. சுற்றளவிற்குள்ளாக ஒரு தீயணைப்பு நிலையம் இருந்தாலோ, 50,000 மக்கள் தொகைக்கு குறைவாகவோ இருக்கக்கூடாது.

அதனடிப்படையில் மக்கள் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கடந்த ஓராண்டில் (2019-20ல்) மட்டும் 15 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் துவக்கப்பட்டன. தற்போது மொத்தம் 346 தீயணைப்பு நிலையங்கள் தமிழ்நாட்டில் எங்கள் ஆட்சியில் இயங்கி வந்தன.எனவே இந்த அரசு வாடகை கட்டிடங்களில் தீயணைப்பு நிலையங்கள் இல்லாமல் சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காவலர்களின் பணிச்சுமை

பெரம்பலூரில் பெண் டிஎஸ்பி ஒருவர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக சமூக வளைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதேபோல் கல்பாக்கம் காவல்நிலைய பெண் காவலர், உடன் பணிபுரியும் காவலர்கள் மீதே புகார் தெரிவித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் பல ஆயுதப்படை காவலர்கள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு மாய்த்து கொள்கிறார்கள். இச்சம்பவங்களுக்கு பணிச்சுவை மற்றும் மன உளைச்சலே காரணமாகும். இதனை போக்க அரசும் காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நிமான்ஸ், காவலர் புத்தாக்க பயிற்சி , காவலர் நிறை வாழ்வு பயிற்சி திட்டம்

காவல் துறையினர் மன அழுத்தத்தை குறைக்க பெங்களூரில் உள்ள நிம்மான்ஸ் என்ற மருத்துவமனையுடன் இணைந்து, காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி திட்டம் ஒன்றை உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியை 2018-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

இந்த புத்தாக்க பயிற்சியில் காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினை இந்த அரசும் தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்படுத்த வேண்டும் .

காவலர்கள் மிரட்டப்படும் மற்றும் துன்புறுத்தப்படும் சம்பவங்கள்

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில், கோயில் திருவிழாவில் பெண் காவல் உதவி ஆய்வாளரை (மார்க்ரெட் தெரேசா) ஆறுமுகம் என்பவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுபற்றி விசாரித்ததில், ஆறுமுகம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த செயலை ஆறுமுகம் செய்துள்ளதாக தெரிய வருகிறது.

(23.4.2022) சென்னை கொடுங்கையூரில் மது போதையில் தகராறு செய்தவரை தட்டி கேட்ட போலீஸ்காரரை சுரேஷ்குமார் என்பவர் தாக்கி கடித்து குதறியுள்ளார்.

(20.12.2021) சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. ரவீந்திரனை தாக்கி விட்டு அவரது செல்போனை 2 நபர் பறித்து சென்றுள்ளனர்.

(8.12.2021) மீஞ்சூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலிசாரை விக்னேஷ் என்ற ரவுடி துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார்.

(8.12.2021) கோவையில் நடைபெற்று ஒரு திருட்டு வழக்கில் ஆம்பூர் அருகே உள்ள கணேஷ் என்பவரை கைது செய்து விசாரணைக்கு கோவை அழைத்துச் செல்ல முயலும் போது, கணேசின் ஆதரவாளர்கள் அவரது கை விலங்கை காவலரின் முன்பே வெல்டிங் மூலம் அகற்றி அவரை மீட்டுச் சென்றனர்.       

( 7.12.2021) எழும்பூர் அருங்காட்சியத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண் காவலருக்கு உதவி ஆய்வாளர் (வர்மா) பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்.

(17.12.2021) எழும்பூரில் ஆயுதபடை காவலரை (செல்வகுமார்) தாக்கிவிட்டு செல்போன் பறித்து சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள்

((28.12.2021) சென்னை, காசி தியேட்டர் அருகில் குடிபோதையில் முகக்கவசம் அணியாமல் வந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் (சிவகிருஷ்ணன்), எம்.ஜி.ஆர் நகர் போலீசாரை தாக்கி ரகளையில் ஈடுபட்டார்.

( 19.1.2022) கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கத்தில் வழிப்பறி வழக்கை விசாரிக்க சென்ற எஸ்.ஐ மற்றும் காவலரை தாக்கிய ரவுடி.

(19.1.2022) சீர்காழி அருகே தைக்கால் பகுதியைச் சேர்ந்த ரவுடி செந்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இப்படி பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பணியில் உள்ள காவலர்களுக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலைமையை எண்ணி மனம் பதறுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.