தற்போதைய செய்திகள்

காவிரி நீரை பெற அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – முதலமைச்சர் உறுதி

சென்னை

காவிரி நீரை பெற அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் நேற்று புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்களையும், முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி : காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நமக்கு ஜூன் மாதம் 9 டிஎம்சி நீர், ஜூலை மாதம் 32 டிஎம்சி வழங்க வேண்டும், ஆனால், இதுவரை 9 டிஎம்சி தான் வழங்கியிருக்கிறார்கள்.

பதில்: நேற்றைய தினம் காவேரி நீர் ஒழுங்காற்றுக் குழுவில் நம்முடைய கோரிக்கையை வைத்திருக்கிறோம், அவர்கள் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், பங்கீட்டு நீர் நமக்கு கிடைக்கும்.

கேள்வி : 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீடிக்குமா?

பதில்: அதை இப்பொழுது சொல்ல முடியாது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றதோ அதை பொறுத்துத்தான் நாமும் எடுக்க முடியும். ஏனென்றால், நோய்ப்பரவல் குறைந்தால் தான் நாம் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

கேள்வி: பொது பேருந்து போக்குவரத்துக்கான தடை 31ம் தேதிக்குப் பிறகும் நீடிக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில்: மண்டல வாரியாக பேருந்து விட்டோம். அப்படி பேருந்து விடும்பொழுது மக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து செல்வதால் யார் மூலமாக நோய்த்தொற்று ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம்.

கேள்வி: சேலம் மாவட்டத்தின் கனவுத் திட்டமான உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றாரே.

பதில்: உபரி நீரைத்தான் எடுக்கிறோம். ஏற்கனவே, உயர்நீதிமன்றம் தெளிவான கருத்தை சொல்லியிருக்கின்றது. இதேபோல பொதுநல வழக்கு ஒருவர் போட்டிருந்தபொழுது, உபரிநீரை என்ன செய்வீர்கள் என்றும், அதற்கு அரசு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்குப் பிறகுதான் பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீரை ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டியும், உபரிநீரை Lift irrigation மூலமாக வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்பியும், நிலத்தடி நீரை உயர்த்த வேண்டுமென்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தையே அம்மாவினுடைய அரசு அமல்படுத்தியிருக்கிறது.

ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். உபரி நீரை தான் நாங்கள் எடுக்கிறோம். ஏற்கனவே உங்களுக்கு தெரியும். மேட்டூரில் அணை நிரம்பி பாசனத்திற்கு போக உபரி நீர் கடலில் கலந்தது. அதுபோன்ற காலக்கட்டத்தில் தான், நாம் அந்த நீரை எடுத்து நம்முடைய பகுதிகளில் இருக்கின்ற ஏரிகளில் நிரப்புகிறோம். இதனால் டெல்டா பாசனத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. உபரி நீர் யாருக்கும் பயனில்லாமல் கடலில் கலக்கிறது. அப்படி கடலில் கலக்கின்ற நீரை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று உயர்நீதிமன்றம் கேட்டதனால், அது அரசினுடைய கவனத்திற்கு வந்து, பரிசீலித்து அந்த உபரி நீரை பயன்படுத்தலாம் என்பது தான் இந்த திட்டம்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.