கன்னியாகுமரி

கிராமிய கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் – என்.தளவாய் சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், சமூக நலத்துறை மற்றும் பிள்ளையார்புரம் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் பொங்கல் மற்றும் கிராமிய கலைவிழா – 2021 நிகழ்வை துவக்கி வைத்து, கிராமிய கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பேசியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், சமூக நலத்துறை சார்பாக, பிள்ளையார்புரத்தில் ஆண்டுதோறும் இவ்விழா அரசு விழாவாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய கொரோனா காலத்தில், கிராமிய கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும், கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

நிவாரணம் கிடைத்தும், கிராமிய கலைஞர்கள் தங்கள் கலை பணியை தொடர இயலாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். தற்போதைய கொரோனா காலத்தில் எந்த விழாக்களும், பொது நிகழ்ச்சிகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராமிய கலைஞர்களின் பொங்கல்விழா அரசு விழாவாக நடைபெறுவதால், அரசின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு, இன்று இவ்விழா நடைபெறுகிறது.

இதன் வாயிலாக, கிராமிய கலைஞர்கள் தங்களது கலைகளை இந்த மேடையில் மிகச்சிறப்பாக வெளிபடுத்திக்கொண்டிருப்பதை, காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உங்களது கலைப்பணி சிறக்க இந்த பொங்கல் திருநாளில் மனமார வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பேசினார்.

இவ்விழாவில், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆர்.சரோஜினி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எம்.ஜாண்சிலின் விஜிலா, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் என்.காமராஜ், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் சி.ராஜன், ஊர்தலைவர் சி.பொன்ராகவன், செயலாளர் ஆர்.கனகராஜன், பொருளாளர் பி.பரமேஸ்வரன், சட்ட ஆலோசகர் ஆர்.சுரேஷ்குமார், வீராசாமி, என்.எம்.செல்வகுமார், சமூக நலத்துறை பணியாளர்கள், இசைக்கலைஞர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.