தமிழகம்

கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாப்படும்

முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்பாடி மற்றும் அண்ணா கலையரங்கம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

தமிழ் கூறும் நல்புலவர், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பன்நூல்களையும் சுவைபட பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றி, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தையும் வளர்த்த பெருமைக்குரியவர் திருமுருகர் கிருபானந்தவாரியார். இவர் 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம்,காங்கேய நல்லூரில் பிறந்தார்.

இவர் 19-ம் வயது முதல் சமய, சமூக சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கி, அதன் மூலம் கிடைத்த வருவாயினை ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் ஆகிய மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்காக செலவிட்டார். இரண்டு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களால் முனைவர் பட்டமும், இசைப் பேரறிஞர் பட்டமும், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இந்திய அரசால், இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட சிறப்புக்குரியவர்.

புரட்சித்தலைவருக்கு “பொன்மனச் செம்மல்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தவர் கிருபானந்த வாரியார். அவரது நினைவாக அவர் பிறந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.