சிறப்பு செய்திகள்

குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1500 – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

சென்னை ராயபுரத்தில் உள்ள தலைமை கழகத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கழகத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதில் பல்வேறு அறிவிப்புகள் மக்களின் மனம் நிறைவுபெறும் விதத்தில் இடம்பெறும்.

அதில் மகளிரின் நலனுக்காக குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூ 1500 குடும்பத் தலைவியிடம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல அறிவிப்புகள் விரைவில் கழக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படும். அவர்களை பார்த்து நாங்கள் அறிவிக்கிறோம் என்பது தவறு. நாங்கள் ஏற்கனவே தேர்தல் அறிக்கையை 10 தினங்களாக தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

இது எப்படியோ கசிந்து விடுகிறது. அதை வைத்து அவர் திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். இந்த கசிவு என்பது ஒரு ஆர்வக்கோளாறு. வேறு ஒன்றும் கிடையாது. நல்ல திட்டங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதுஎளிது.

நீங்கள் கூட ஒரு செய்தியை மற்றவர்களிடம் பகிந்து கொள்வதில்லையா. அதில் ஏதாவது கசிந்து விடுகிறது. அதுபோலத்தான் இதுவும். நிறைய திட்டங்களில் ஒருசில கசிந்து விடுகிறது. மக்கள் மனம் நிறைவுபெறும் அளவிற்கு கழக தேர்தல் அறிக்கை இருக்கும்.

நான் அண்மையில் தலைவாசலில் மகளிர் குழு கூட்டத்தை நடத்தினேன். 4 தொகுதியில் இருந்து 40 ஆயிரம் பேர் வந்தார்கள். திமுக மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர்தான் கலந்து கொண்டார்கள். அதில் 56 ஆயிரம் சே ர்தான் போட்டார்கள்.

எல்லாமே எண்ணிக்கை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஒருலட்சம் பேர் தான் அதில் கலந்து கொண்டார்கள். இதன் மூலம் அந்த கட்சியின் (திமுக) செல்வாக்கு எப்படி என்பதை நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நாகூர் தர்காவிலிருந்து எங்களை வந்து பார்த்து நன்றி தெரிவித்து விட்டு சென்றார்கள். நேற்றையதினம் கூட பல கிருஸ்தவ அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.

எனவே இஸ்லாமியர்களாக இருந்தாலும், சரி கிருஸ்தவ மக்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் எங்களுக்கு ஆதரவு
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவர் ஆட்சிக்காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி காலத்திலும் சரி.அம்மாவின் மறைவுக்கு பிறகும் சரி தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்குபேணி காக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. சிறுபான்மை மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தொழில் செய்கிறார்கள். நிம்மதியாக வாழக்கூடிய மாநிலம் தமிழகம் என்று எல்லா மக்களும் இன்றைக்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.