தற்போதைய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ விலையில்லா அரிசி – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கொட்டையூர், நார்த்தகுடி, புலவர்நந்தம், பாடகச்சேரி, தொழுவூர், ஆலங்குடி, திருவோணமங்கலம், மேலவிடையல், கீழவிடையல், வலங்கைமான் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து கபசுரக்குடிநீர், முகக்கவசம், துண்டு பிரசுரம் ஆகியவை வழங்கி கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் எம்.துரை முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதல்வர் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை முமுமையாக ஈடுபடுத்தி கொண்டு ஒவ்வொரு நாளும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் மக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார், இருப்பினும் கொரோனா தொற்றால் எவரேனும் பாதிக்கப்பட்டாலும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை குணமடைய செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இறப்பு சதவீதம் உலக நாடுகளை ஒப்பிடும்வகையில் தமிழகத்தில் தான் மிக குறைவு. சதவீத அளவில் 1.6 சதவிதம் தான் உள்ளது. சென்னை பகுதிகளில் மிக அதிகமாக காணப்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை போல பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது குறைவாக இருந்த நிலையில் பின்னர், கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக இருந்து தற்பொழுது வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலம் 1600 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும், தற்பொழுது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.

தற்பொழுது சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1200 என்ற நிலையில் உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களும் கொரோனா தொற்றின் முதற்கட்ட நிலையில் தான் உள்ளனர். அவர்களும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைகளுக்கு பிறகு வீடுகளுக்கு திரும்ப உள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவது, சமூக வலைதளங்களில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாரத பிரதமர் அவர்கள் AAY குடும்ப அட்டைதாரர்களுக்கும், முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கும் என 1 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைகளிலுள்ள நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் விலையில்லா அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் விலையில்லா அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாநில நிதியிலிருந்து ரூ.430 கோடி ஒதுக்கீடு செய்து அந்தவகையில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைகளிலுள்ள நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்க உத்தரவிட்டு அந்தவகையில், வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் அறிவிப்பின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை தற்பொழுது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியுடன் கூடுதலாக நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் விலையில்லா அரிசியும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நெல் கொள்முதல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 28 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் என்ற இலக்காக இருந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் 30 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் அளவிற்கு உயரும் என்ற நிலை உள்ளது. இந்த நிகழ்விற்கு காரணம் விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை, உரம், பூச்சிமருந்து போன்ற அனைத்து விவசாய தேவைகளையும் பூர்த்தி செய்த நிலையில் இந்தாண்டு நல்ல விளைச்சல் காணப்பட்டுள்ளது.

மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு உரிய தொகையினை அவர்களது வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்பட்டுவருகிறது. இதுவரை 27 லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

ரூ.5 ஆயிரத்து 272 கோடி பணம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் செய்வதில் விவசாயிகளுக்கு எந்தவித பிரச்சினையும், சிரமமும் இல்லை. இதுமட்டுமின்றி எந்தெந்த இடங்களுக்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் தேவையோ அந்தந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின்பேரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்ளலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, திடீர் மழை போன்ற நிகழ்வுகளால் நெல் கொள்முதல் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ளவாறு விவசாயிகள் வரிசைப்படி, குறிப்பிட்டுள்ளவாறு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்றால் அவர்களது நெல் கொள்முதல் செய்து கொள்ளப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1000 மூட்டைகள் என்று நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நனைந்த நெல் என அறியப்பட்டாலும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அறவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் அரசு தொடர்ந்து விவசாயிகளை பாதுகாக்கின்ற அரசாக விளங்குகின்றது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து, வலங்கைமான் வட்டம், மேலவிடையல் ஊராட்சி, குப்பசமுத்திரம் பகுதியில் பருத்தி வயலில் பருத்தி எடுத்து கொண்டிருந்த பெண்களுக்கு முகக்கவசம் வழங்கி, சமூக இடைவெளியினை பின்பற்றி விவசாய பணியினை மேற்கொள்ள வேண்டும் என கொரோனா தொடர்பான விழிப்புணர்வை எடுத்துரைத்தார்.

இந்தஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் ஜெயபீரித்தா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், ஒன்றியக்குழுத்தலைவர் சங்கர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் மரு.விஜயகுமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.