தற்போதைய செய்திகள்

குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட போர்வீரர்களாக புறப்படுவோம்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சூளுரை

நாகப்பட்டினம்

குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட போர்வீரர்களாக புறப்படுவோம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சூளுரைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட கழக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை. தாங்கினார். நகர கழக செயலாளர் தங்க கதிரவன் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

அரசியல் என்பது ஒரு பெரிய குடும்பம். இதில் நாம் ஒற்றுமையுடன் இருந்து கடுமையாக உழைத்தால் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு நிறைவேறும். 100 வருடம் கழகம் மக்கள் பணியாற்றும் என்று அம்மா அவர்கள் கூறிய வார்த்தையை நாம் நிறைவேற்ற வேண்டும்.

அரசியலில் ஒற்றுமை என்பது மிக முக்கியம். ஒற்றுமையாக இருந்து முதலில் அவரவர் இருக்கும் பகுதிக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும். பிறகு வட்டாரம் அடுத்து அவர்களது தொகுதி என்று பாடுபட வேண்டும்.

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் கழகத்தை சாதரணமாக உயர்த்தவில்லை. பல்வேறு சிரமங்களை சந்தித்து தியாகங்கள் செய்து தான் இன்று தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக ஆலமரம் போல் வளர்ந்து இமயமலை போல் உயர்ந்து நிற்கிறது கழகம்.

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அவ்வாறு உழைத்தால் தமிழகத்தில் குடும்ப அரசியலை காணமல் போய் விட செய்யலாம்.

கழகத்திற்கு பின்னால் ஒரு வரலாறே உள்ளது. அது மிகப்பெரிய வரலாறாகும். கட்சி தெண்டர்களை மதித்து, அவர்களை ஒற்றுமைப்படுத்தி உயர வைத்த பெருமை புரட்சித்தலைவருக்கும், புரட்சித்தலைவிக்கும் உண்டு.

ஒரு முறை அம்மாவை லாரியை விட்டு மோதி கொலை செய்ய பார்த்தார்கள். அடுத்து சட்டசபையிலே அம்மாவை இழிவுபடுத்த முயற்சித்தார்கள். இதை எல்லாம் கடந்து ஒரு வீரப்பெண்ணாக வாழ்ந்தவர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்.

எனவே அவர் காட்டிய வழியில் வந்த எடப்பாடியார் மிக சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தமிழக மக்கள் பாராட்டுகிறார்கள். இதை கேட்ட ஸ்டாலின் என்ன செய்வது என்று புரியாமல் பித்துபிடித்து அலைகிறார். என்ன பேசுவது, என்ன செய்வது, என்று புரியாமல் தவிக்கிறார்.

தமிழகத்தின் வளர்ச்சி தமிழக மக்களின் நன்மையை மனதில் வைத்து நாம் உழைத்தால் வெற்றி நிச்சயம். எனவே கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டால் பதவிகள் நம்மை தேடி வரும். இது கழகத்தில் மட்டும் தான். எனவே புதிய பதவிகளுடன் இருக்கும் நீங்கள் ஒரு போர் வீரனாக செயல்பட்டு எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

கருணாநிதி ஒரு முறை கூறினார். மத்தியில் நேரு, பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியகாந்தி என்று பிரதமர்கள் வந்துள்ளனர். இந்த குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றார்.

ஆனால் தி.மு.க.வில் இப்போது என்ன நடக்கிறது. ஸ்டாலின், தயாநிதிமாறன், கனிமொழி, உதயநிதி. இது குடும்ப அரசியல் இல்லையா. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இவர்கள் என்ன செய்தார்கள். ஆனால் மக்களிடம் பொய் சொல்லி இப்போது ஓட்டு கேட்க வருகிறார்கள். நாம் உண்மையை சொல்வோம். கழக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் ராதாகிருட்டிணன், அவை பாலசுப்ரமணியன், ஆர்.கிரிதரன், டி.சுப்பையா, வேதையன், பாலை செல்வராஜ், எம்.சிவா, பக்கிரிசாமி, தங்கசெளரிராஜன்.குணசேகரன், பன்னீர். வெண்மணி குமார். மற்றும் மாவட்ட, சார்பு அணி, செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், மகளிரணியனர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.