விருதுநகர்

குழந்தை திருமணம் தடுத்தலை செயல்படுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு, விருதுநகர் ஆட்சியர் உத்தரவு

விருதுநகர்

மாவட்ட ஊராட்சி தலைவர் உதவியுடன் குழந்தை திருமணம் தடுத்தலை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் சமூக நலத்துறை மூலம் ஒருங்கிணைந்த சேவை மையம், மகிளா சக்தி கேந்திரா திட்டம் மற்றும் குழந்தை திருமண முறையை ஒழித்தல் தொடர்பான மாவட்ட அளவிலான சிறப்பு பணிப்பிரிவு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், தேவைப்படும் ஆலோசனைகளை உடனடியாகவும், அவசர கால அடிப்படையில் எளிதாக பெற வழிவகை செய்தல். பாதிக்கப்பட்ட பெண்கள் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம் .

இம்மையத்தின் மூலம் பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர சேவை மற்றும் ஆலோசனைகள், புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு மருத்துவ வசதி மற்றும் காவல் துறையின் உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனை தற்காலிகமாக தங்கும் வசதி ஆகிய சேவைகள் அளிக்கப்படுகின்றது.

இத்திட்டம் தமிழ்நாட்டின் குழந்தை திருமணம் சராசரியை (19.8% – NFHS -4) விட அதிகம் உள்ள மாவட்டங்களில் யுனிசெப் ஆதரவுடன் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டமாகும். இத்திட்டம் விருதுநகர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, கோயமுத்தூர், மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுகிறது. விருதுநகரில் 20-24 வயதிற்குட்பட்ட திருமணமான பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 19.8 சதவீதம் பெண்கள் 18 வயதிற்குள் திருமணம் ஆனவர்கள் என தெரிய வந்துள்ளது. NFHS -4/ 2014 – குறிப்பாக வளரிளம் பருவ பெண்கள் அதிக பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

பள்ளி இடைவிலகல், குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, இளவயதில் கருவுறுதல், ஊட்டச்சத்து குறையாடு, துன்புறுத்தல்கள், குறைவான தகவல்கள், முடிவெடுத்தலில் அனுமதி மறுப்பு, வாய்ப்புகள் மறுப்பு இவைகளில் இருந்து அரசு துறைகள் இணைந்து வளரிளம் பருவத்தினரை பாதுகாக்கவும் அவர்களை மேம்படுத்துவதும் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மேலும், விரைவில் செயல்படுத்த சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட, மகிளாசக்தி கேந்திரா திட்டம், குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வளரிளம் பெண்களுக்கான தொழிற்பயிற்சிகளை நடத்துவதற்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் உதவியுடன் செயல்படுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன், விருதுநகர் மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.சதிஷ், சார் ஆட்சியர்(சிவகாசி) சா.தினேஷ், சமூக நலத்துறை அலுவலர் இந்திரா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜம், மகிளா சக்தி கேந்திரா அலுவலர்கள் தியாகராஜன், மது பாலா, ரேசல் அருமை மற்றும் அரசு அலுவலர்கள உட்பட பலர் கலந்து கொண்டனர்.