சிறப்பு செய்திகள்

கூட்டுறவு சங்கங்களை கலைப்பது சரி அல்ல-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சேலம்

கூட்டுறவு சங்கங்களை கலைப்பது சரி அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- தமிழக அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. அதையெல்லாம் ஆளுநநர் புறக்கணிக்கிறாரே, அது குறித்து உங்கள் கருத்து?

பதில்:- ஆளுநரிடம் தான் இந்த அரசாங்கம் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். மசோதாக்கள் சரியாக இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும். அது முறையாக அம்மா இருக்கும் போதும் நடைபெற்றது. அம்மாவின் மறைவிற்கு பிறகு அம்மாவுடைய அரசு தொடர்ந்து கூட்டுறவு நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக, கூட்டுறவு சங்க தேர்தலை சிறப்பாக நடத்தியது.

ஆனால் இந்த அரசாங்கம் இரண்டு ஆண்டுகளிலேயே கூட்டுறவு சங்கத்தை கலைக்க மசோதா நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எப்படியோ, அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தை கலைப்பது சரியல்ல. இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.

ஆங்காங்கே ஊழல் நடைபெற்றதாக சொல்கிறார்கள். ஊழல் நடைபெற்ற சங்கத்தை கலையுங்கள். தவறே கிடையாது. கழக அரசு இருக்கும்போதும் எந்தெந்த சங்கத்தில் முறைகேடு இருந்ததோ அதை கண்டுபிடித்து அந்த சங்கத்தை கலைத்தார்கள்.

ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கின்ற கூட்டுறவு சங்கங்களை கலைக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம், கூட்டுறவு சங்கம் என்றால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மட்டுமல்ல,

வீட்டு வசதி வாரிய கூட்டுறவு சங்கம் இருக்கிறது, நெசவாளர் கூட்டுறவு சங்கம் இருக்கிறது, மீனவர் கூட்டுறவு சங்கம் இருக்கிறது. இப்படி கிட்டத்தட்ட சுமார் 18 அமைப்புகள் உள்ளன. இவை எல்லாவற்ளையும் கலைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.

கேள்வி:- ஒரு பக்கம் மதுரை ஆதீனம் அரசியல் பேசுகிறார், இன்னொரு பக்கம் சிதம்பரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அதாவது காலம் காலமாக தி.மு.க.வும் ஆட்சியில் உள்ளது, கழகமும் ஆட்சியில் உள்ளது. அப்போதெல்லாம் ஆதீனத்தில் நுழையவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு, ஒரு சதி செயல் செய்கிறார்களோ என்று பார்க்கிறேன். ஏனென்றால் தி.மு.க.வும் பல ஆண்டு காலமாக, ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். கழகமும் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது.

அப்போதெல்லாம் ஆதீனத்தில் எல்லை மீறிய சம்பவம் நடைபெறவில்லை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த அறிவிப்பு படி நடக்க வேண்டும். அதுதான் முறை. அதுதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த தி.மு.க. அரசாங்கம் ஏற்பட்ட பிறகு ஏதேதோ தவறான வழியிலே யாருடைய பேச்சை கேட்டு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு தவறான போக்கு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.