தற்போதைய செய்திகள்

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூலம் 6.60 கோடி பேருக்கு ரூ.2.64 லட்சம் நகைக்கடன்

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

சென்னை

கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் மூலம் 2011 முதல் 31.12.2021 வரை 6,60,52,332 நபர்களுக்கு, 2 லட்சத்து 64 ஆயிரத்து, 464.66 கோடி ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று முன்தினம் மாதவரத்திலுள்ள, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி நடத்தும் பயிற்சி நிலையத்தில், கூட்டுறவுத் துறையின் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் வாயிலாக, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பேசியதாவது:-

இந்த ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் இதுவரை 13,532 நபர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் வாயிலாக தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாநில அளவிலான இதர தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக இருந்த 175 உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 170 உதவியாளர்களுக்கு 27.01.2021 முதல் 2.02.2021) வரை பயிற்சிகள் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் 3 அடுக்கு முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் என்ற அமைப்பில் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் வேளாண் கடன் தேவைகளையும், பொது மக்களின் அவசர கடன் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று மாநிலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வங்கி, சென்னையில் 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் எந்த பகுதிக்கும் நிதிமாற்றம் செய்யும் வகையில், மைய வங்கியியல் சேவை, நிகழ்நேர மொத்தத் தீர்வு முறை, தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்ஆகிய வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது, குறுஞ்செய்தி வசதி அலைபேசி வங்கியியல் சேவை, இணையதள வங்கிச் சேவை, உடனடி கட்டணச் சேவை வசதி ஆகிய வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவைகளை வழங்கி வருகிறது.

சென்னை முழுவதும் இவ்வங்கியின் மூலம் 12 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. மேலும், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விதமான சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், இவ்வங்கிகள் குளிர்சாதன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

2011 முதல் 31.12.2021 வரை 6 கோடியே, 60 லட்சத்து 52 ஆயிரத்து, 332 நபர்களுக்கு, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் 2 லட்சத்து 64 ஆயிரத்து, 464.66 கோடி ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் திறனை ஊக்குவித்து அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதற்காக இதுவரை 141293 மகளிருக்கு ரூ.606.24 கோடி, அளவிற்கு மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி பணிபுரியும் மகளிரின் குடும்பத் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் 88217 மகளிருக்கு ரூ. 679.96 கோடி, சம்பளக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்திட 428705 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.8017.67 கோடி, கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கிட அம்மா அவர்கள் ஆணையிட்டதற்கிணங்க, 67975 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.284.79 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும், சிறுதொழில் புரிபவர்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் அதிக அளவில் அவர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்து பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது.

“கோவிட் – 19 சிறப்புக் கடனுதவி திட்டத்தின் கீழ்” மகளிர் சுயஉதவிக் குழுக்களின் அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக, ரூ.1 லட்சம் வரை, கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 08.05.2020 முதல் 31.12.2020 வரை 16376 குழுக்களுக்கு ரூ.145.47 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.


நடப்பாண்டில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் வழங்கிய கடன்கள் ரூ.5,000 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. வங்கியின் நடைமுறை மூலதனம் 2020-21-ம் ஆண்டில் ரூ.4,500 கோடியாக உயர்ந்துள்ளது. 968 சிறு வணிகர்களுக்கு ரூ.4 கோடி அளவிற்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி.சக்திசரவணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.