மதுரை

கூட்டுறவு வங்கி சார்பில் விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரை வட்டியில்லா பயிர் கடன் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தகவல்

மதுரை

திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு கூட்டுறவு வங்கி சார்பில் விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் வரை வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறினார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி சார்பில் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள கூத்தியார்குண்டு கூட்டுறவு வங்கி சார்பில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளரும், கூத்தியார்குண்டு கூட்டுறவு வங்கி தலைவருமான நிலையூர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிலையூர், கூத்தியார்குண்டு, சம்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற விவசாயிகளுக்கு 17 லட்சம் ரூபாய் வட்டியில்லா பயிர்க்கடனை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.

பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்ததாவது;-

முதலமைச்சர் விவசாயிகள் நலன் கருதி இந்த ஆண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க 10,000 கோடி அளவில் நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி தமிழக முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா நோய் காலத்திலும் விவசாய மக்கள் பாதிப்படையக்கூடாது என்று தொடர்ந்து குடிமராமத்து திட்டம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மேட்டூர் அணை உட்பட பல்வேறு அணைகளில் இருந்து விவசாயிகளுக்கு தேவையான நீரை முதலமைச்சர் திறந்து விட்டு வருகிறார். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

தற்போது கூட இந்த கூத்தியார்குண்டு கூட்டுறவு வங்கி சார்பில் நெல் விவசாயிகள், மல்லிகை விவசாயிகள், வாழை விவசாயிகள் ஆகிய 13 விவசாயிகளுக்கு 17 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்த கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.60 லட்சம் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் கூட்டுறவு விரிவாக்க அலுவலர் ஜெயபிரகாஷ், கூட்டுறவு சங்க செயலர் கதிர்வேல், துணைத்தலைவர் ரகுபதிராஜ், பகுதி கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், மோகன்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.