தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் 1.47 லட்சம் பேர் பயன் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

24 மணி நேரமும் இயங்கும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரை 1.47 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அம்மாவின் அரசு, முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறையில் தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி ஆகிய பிறமொழிபேசும் சுகாதாரப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு ஒருநாளைக்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் தொலைபேசி மூலம் வழங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் கீழ் 10 பிரிவுகள் இயங்கி வருகின்றன.

பொதுமக்கள் இம்மையத்தினை தொடர்பு கொண்டு கொரோனா நோய் பற்றி எழும் சந்தேகங்களையும், தடுப்பு நடவடிக்கை பற்றிய விபரங்களையும், சிகிச்சை முறைகள் பற்றியும் தொலைபேசி வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒரு சுழற்சிக்கு 2 நபர்கள் வீதம் மனநல ஆலோசகர்கள் பணியமத்தப்பட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். மனநல ஆலோசனைகளை விரும்பும் பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மன நல ஆலோசனைகளை பெறலாம்

இந்த அவசரகால கட்டுப்பாட்டு அறையுடன் 8 கட்டணமில்லா தொலைபேசிகள் 044-29510400 / 044-29510500 / 044-29510300 / 044-46274446, கைபேசி : 9444340496 / 8754448477 என்ற எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இந்த பிரத்யேக கட்டுப்பாட்டு அறை, இதுவரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1,47,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை திறமையாக கையாண்டு கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளை மிகச்சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.