சிறப்பு செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது – எதிர்க்கட்சி தலைவர் சாடல்

சேலம்

கொரோனாவை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு 600 ஆக இருந்தது. இன்றைக்கு 26981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது, ஆனால் தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

இதை கட்டுப்படுத்துவதற்கு தி.மு.க. அரசு தவறி விட்டது, சரியான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினந்தோறும் பேட்டி கொடுத்துக் கொண்டு உள்ளார்.

சேலத்தில் மட்டும் நேற்றைய தினம் 785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த அரசு சரியான நிர்வாக திறமை இல்லாத அரசு என்பது இதன் மூலமாக தெள்ளத்தெளிவாக தெரிகின்றது, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இனியாவது இந்த அரசு விழிப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே இதையெல்லாம் மறைப்பதற்காக தான் இன்றைய தினம் தருமபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிலேயும், அவரது உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களை திசை திருப்புவதற்காக ரெய்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து, இந்த பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்து இருக்கும் நிலையில் மக்களை திசை திருப்புவதற்காக இந்த ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

இதை தி.மு.க.வின் பழிவாங்கும் செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பெற்றதிலிருந்து, கழக நிர்வாகிகள் மீதும், தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போடுவது, முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்பி, லஞ்ச ஒழிப்பு காவல்துறையை பயன்படுத்தி இன்றைக்கு இந்த செயலில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. முறைகேடுகளை எல்லாம் மறைப்பதற்காக தி.மு.க. அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது. கழகத்தை சேர்ந்த பல கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றார்கள், ஆனால் அவர்களையெல்லாம் தோல்வியுற்றதாக அறிவித்தார்கள், அதனால் தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வித முறைகேடும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இந்த தி.மு.க. அரசு நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏனென்றால் தி.மு.க. அரசு எப்போதுமே நியாயமாக தேர்தல் நடத்தியதாக வரலாறு கிடையாது, அதனால் தான் உயர் நீதிமன்றத்தை நாடினோம். உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.