சிறப்பு செய்திகள்

கொரோனாவை கையாளுவதில் தி.மு.க. அரசு தொடர் தோல்வி

நீட்டிக்கப்படும் ஊரடங்கால் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பு

சென்னை,

மே 2 வரை கொரோனாவின் முதல் அலையை கட்டுக்குள் வைத்து உலக சுகாதார மையம் தொடங்கி இந்திய மருத்துவக் கவுன்சில் வரை அனைவரது பாராட்டையும் பெற்றது அன்றைய எளிமைச் சாமானியர் எடப்பாடியாரின் கடமை மிக்க கழக ஆட்சி.

ஊரடங்குகளை காலத்தே மேற்கொண்டு வரும்முன் காக்கும் விதமாக கொரோனா பரிசோதனைகளை இலவசமாக செய்து மருத்துவ முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் நடத்தி, நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை ஆரம்ப சுகாதார பணியாளர்களை கொண்டு மக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிறப்பாக மருத்துவ சிகிச்சைகளை வழங்கி அறிவியல் மருத்துவம், அதனுடன் அனுபவ மருத்துவம் இவற்றோடு பாரம்பரிய பெருமை கொண்ட நமது சித்த மருத்துவம் ஆகியவற்றை கொண்டு கொரோனாவுக்கு உயிரிய சிகிச்சைகளை மேற்கொண்டு முதல் அலையை முடிவுக்கு கொண்டு வந்தது அன்றைய கழக ஆட்சி.

அதே நேரத்தில் ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களை இனம் கண்டு அவர்கள் அனைவருக்கும் நிவாரணங்களை வழங்கியும், நியாயவிலை கடைகள் மூலம் அரசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கியும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் மிக லாவகமாக கையாண்டது கழக அரசு. ஆனால் மே 2-க்கு பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் தி.மு.க. அரசு அரசியல் விபத்தால் பதவி ஏற்றது.

அன்று தொடங்கி இன்று வரை வெறும் ஊரடங்குகளை மட்டுமே தொடர்ந்து அறிவித்துக் ெகாண்டிருக்கிறது தி.மு.க. ஆட்சி. ஆனால் இரண்டாம் அலையின் மிக கொடூரமான தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தில் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனா பரிசோதனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்ததோடு கொரோனா பரிசோதனைகளையும் அதிகமாக நடத்தாமல் கொரோனா பரவல் எண்ணிக்கையை தி.மு.க. அரசு குறைத்து காட்டுவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, தடுப்பூசிகளை துப்புரவு பணியாளர்களே போடுகிற அளவுக்கு செவிலியர்கள் பற்றாக்குறை, இவற்றோடு மருந்துகளின் பற்றாக்குறை என முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் மக்கள் விழி பிதுங்க வழி நடத்த வேண்டிய அரசோ வழிவகை தெரியாது ஊடகங்கள் துணையோடு தமிழகத்தில் இயல்பு நிலை இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறது.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது. அதற்காக கொரோனாவால் இறந்தார் என்பதற்கான இறப்பு சான்றிதழில் மருத்துவமனைகளில் இருந்து வழங்க மறுக்கப்படுகின்றன. இது ஒருபக்கம் இருக்க விலைவாசி உயர்வு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்புகளால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல லட்சம் பேர் வேலையிழந்துள்ள நிலை, வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு என அனைத்து நிலைகளிலும் மக்களின் சமூக பொருளாதார சூழல் பெரும் சங்கடத்தை சந்தித்துள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு அடிபணிந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கோ தி.மு.க. தந்திருக்கும் மின்வெட்டு இடர்பாடு கடுமையான துன்பத்தையும், மன உளைச்சலையும் உருவாக்கி இருப்பதோடு இதுவரை இல்லாத அளவாக மின் கட்டணம் வசூல் கொள்ளை ஏழை, எளிய மக்களுக்கு கடும் பாதிப்பை தந்திருக்கிறது.

தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று வருவதில் சுணக்கம், வாங்கி வந்த மருந்துகளை மக்களுக்கு செலுத்துவதில் தடுமாற்றம் என அனைத்து நிலைகளிலும் கொரோனாவை கையாள்வதில் தமிழக அரசு தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது.

இப்படி ஊரடங்கு ஒரு பக்கம், கொரோனா பரவல் ஒரு பக்கம், விலைவாசி உயர்வு ஒரு பக்கம், மின்வெட்டு ஒரு பக்கம், மின் கட்டண கொள்ளை ஒரு பக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஒரு பக்கம், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஒரு பக்கம் ஆக திரும்பும் திசையெல்லாம் இன்னல்களே எண்ணில்லாத அளவில் பெருகி நிற்பதை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்து மக்கள் தவிக்கிறார்கள்.

ஆனால் இதனையெல்லாம் மதி நுட்பத்தோடு எதிர்கொண்டு வழிநடத்த வேண்டிய தி.மு.க. ஆட்சியோ ஒவ்வாத விஷயங்களை பேசிக் கொண்டு நாட்களை நடத்துகிறது. இந்த நிலை என்று மாறுமோ என்பது தான் தமிழகத்து மக்களின் பெரும் எதிர்பார்ப்பு.