தற்போதைய செய்திகள்

கொரோனா’ இல்லாத நிலையை உருவாக்குவோம் – முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசியதாவது :-

இப்பொழுது தீபாவளி பண்டிகை வரவிருக்கின்றது. சென்னை மாநகரத்தில் தெருக்கள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றார்கள். காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலை உருவாகும், நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.

கொரோனா வைரஸ் நோய் இருக்கின்ற பகுதிகளில், தொடர்ந்து கிருமிநாசினி தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதோடு, பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை துவங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. பருவமழை துவங்குகின்ற இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் தேங்காமல் மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.

அரசு அறிவித்த பசுமை வீடு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து, அப்பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரிகின்றனவா என்றும், அப்படியில்லையென்றால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இவை எல்லாம் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பணி. அதேபோல், நியாய விலைக் கடைகளின் அத்தியவாவசியப் பொருட்கள் முழுவதும் மக்களுக்கு தங்குதடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்து விடுகிறது, அப்படி அதிகரித்து விடாமல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருசில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கிறது. தீபாவளி வருவதற்குள் 100-க்கு கீழ் கொண்டுவர வேண்டும்.

இன்னும் சில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் இருக்கிறது, அதை 50-க்கு கீழ் குறைக்க வேண்டும். 50-க்கு கீழுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வேகமாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து அதற்குண்டான பணிகளை நீங்கள் செய்ய வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம், ஒழுங்கை பொறுத்தவரை, காவல் துறை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றார்கள். அதையெல்லாம் கவனமாக கண்காணித்து, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றிய காரணத்தினால், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் தமிழகத்திலே படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது, இது வரவேற்கத்தக்கது. இன்னும் குறுகிய காலத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க நீங்கள் பாடுபட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.