சிறப்பு செய்திகள்

கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்ததையடுத்து மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனா நோய் தொற்று பரவல் இறங்குமுகமாக இருக்கிறது என்பதும், குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கொரோனா நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 100 நபர்களில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழக்கிறார் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 நாட்களாக இந்த நிலை மேலும் அதிகரித்து காரணப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 460-க்கு குறையாமல் இருந்து வருகிறது. அதாவது பாதிக்கப்பட்டோரில் 1.366 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர். இந்த விழுக்காடு படிப்படியாக அதிகரித்து 4.6.2021 அன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோரில் 2 சதவீதத்தினர் உயிரிழந்துள்ளனர். அதாவது 22,651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னை மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 253 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது உயிரிழந்தோர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இந்த இரண்டு மண்டலங்களை சேர்ந்தவர்கள். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றிருக்கின்ற இந்த சூழ்நிலையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி பாதிப்போரின் எண்ணிக்கையும், குணமடைவோரின் எண்ணிக்கையும் குறைந்து வரும் சூழ்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீக்கப்பட்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் உயிரிழப்புகள் அதிகமாவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.