சிறப்பு செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய அரசின் வழிறைகளை தான் செயல்படுத்தி வருகிறோம் – முதலமைச்சர் பேட்டி

சென்னை

கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய அரசின் வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி : கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுமா?

பதில்: ஏற்கனவே எல்லா மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காவிட்டாலும், நமது மருத்துவர்கள் தங்களது திறமையால் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து, குணமடையச் செய்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : ராணிப்பேட்டையில் அபாயகரமான ரசாயன கழிவுகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா.

பதில்: அதை அகற்றுவதற்கு மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது. அவ்வளவு நிதி நம் அரசிடம் கிடையாது. ஆகவே, மத்திய அரசிடமிருந்து ரூபாய் 600 கோடி நிதி கோரப்பட்டிருக்கிறது. அந்த நிதியை பெறுவதற்கு அனைத்து வகையிலும் அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த நிதி கிடைத்தவுடன் நீங்கள் சொன்ன அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி : பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா தெரிவித்த கருத்து குறித்து..

பதில்: அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா அரசாங்கம் அறிவித்த கொரோனா தடுப்பு வழிமுறைகளை தான் அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் அறிவித்த அந்த அறிவிப்பின்படி அம்மாவின் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.