தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளை அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

ஸ்டாலின் அரசு மீது தேவையற்ற விமர்சனங்களை செய்து வருகிறார். மக்கள் நலனை கருத்தில் கொண்டே கொரோனா தடுப்பு பணிகளை அரசு ழுமுவீச்சில் செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

கொரோனா தடை உத்தரவு காலத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சத்தான உணவுப் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சிகள், ஆலம்பாளையம், படைவீடு பேரூராட்சிகள், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய இடங்களில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான பி.தங்கமணி, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அரசு உயர் அலுவலர்கள் மூலமாக, அங்கு பணியாற்றும் அரசு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை, ஊர்க்காவல் படையினர் உள்பட 2,300 க்கும் மேற்பட்டோருக்கு, நேற்று முட்டைகளை வழங்கினர்.

ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்த பொருள்களை வாங்கிச் சென்றனர். இதில், மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட்டு, அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த முட்டைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, குமாரபாளையம் நகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு தூய்மை இயந்திரங்கள், கவச உடைகள் ஆகியவற்றையும், பள்ளிபாளையம் நகராட்சியில் தமிழக அரசு அறிவித்த சாலையோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 43 வியாபாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணைகளையும் அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் தன்னார்வ நிறுவனங்கள் வழங்கும் கொரோனா நிவாரணப் பொருட்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் பொது மக்களுக்கு சென்று சேரும் வகையில் வழங்கப்படும். இதுகுறித்து மாநில அரசு தெளிவுபடுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 45 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல், மோகனூர், பரமத்தி-வேலூர், கொக்கராயன்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூர் ஆகிய 6 நோய்த்தடுப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, சுகாதாரம்,வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்குத் தேவையான உணவு, பால் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த நோய்த்தடுப்பு மண்டலங்களில் இதுவரை 3 லட்சம் பேர் கண்காணிப்பின்கீழ் உள்ளனர். தொடர்ந்து அப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் வாங்கிட வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வெளியே வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 5.50 லட்சம் குடும்பங்களுக்கு தலா ஒன்றுவீதம் மூவண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெளியே வருவது குறைந்துள்ளது.

அவர்களுக்கு தேவையான பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. எல்லோரும் ஒரே நாளில் வெளியில் வந்தால் கூட்டம் அதிகமாகும் என்பதை தவிர்க்கவே இந்தமுறை நாமக்கல் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சமுதாய இடைவெளியோடு பொருட்கள் வாங்குவதற்கும் நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டை சங்கங்கள் சார்பில் அம்மா உணவகங்களில் வேகவைத்த முட்டை மதிய உணவுடன் சேர்த்து இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர், வருவாய்த்துறையினர் ஆகியோருக்கு தலா 30 முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இன்று மட்டும் சுமார் ஒரு லட்சம் முட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தேவையற்ற விமர்சனங்களை செய்து வருகிறார். இதற்கு முதல்வர், அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் உரிய பதில் அளித்துள்ளனர். ஸ்டாலின் அரசியலுக்காக இவ்வாறு பேசி வருகிறார்.

தமிழக அரசு, மக்கள் நலனை மட்டும் கருதியே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் முதல்வர் ஒவ்வொரு முறையும் கடிதம் எழுதியும், காணொளி காட்சியின் போதும் மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான கொரோனா நிவாரண உதவிகளை வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முழுமையான விளக்கங்களை தினந்தோறும் அளித்து வருகிறார். தமிழக அரசு மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி கொரோனா தடுப்புப் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.