சிறப்பு செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பு – தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுத்தடுப்பு நடவடிக்கை பணிகள் சிறப்பாக உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத்தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கினை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. நோய் அறிகுறிகளைக் கண்டறிவதிலும், கொரோனா நோய் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிவதிலும் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

RT-PCR சாதனங்கள் மூலம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு எடுத்துள்ளதால் இறப்பு சதவிகிதம் மேலும் குறையுமென எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மட்டும் நோய் அதிகளவில் இன்னும் காணப்படுகிறது. எனவே, இதற்கு தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் ஆயூஷ் சஞ்சீவனி செயலியினை தமிழ்நாடு சிறப்பாகப் பயன்படுத்தி தொலை மருத்துவத் துறையில் (Tele Medicine) முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டின் அனுபவம் இந்தியாவிற்கே உதாரணமாகத் திகழ்கிறது. இது நாட்டின் பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் என நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார்.