தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றால் உயிரிழந்த சன் டி.வி செய்தியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நாகப்பட்டினம் சன் தொலைக்காட்சி செய்தியாளருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி –வருமாறு:-

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் பி.ஜான்கென்னடி கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சன் தொலைக்காட்சி செய்தியாளர் ஜான் கென்னடியை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால், அதற்கான மருத்துவ செலவினையும், உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

இதனடிப்படையில் உயிரிழந்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் ஜான்கென்னடி குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அச்சு மற்றும் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் செய்திகளை சேகரிக்கச் செல்லும் போது மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருந்திட வேண்டும் என இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை அன்போடு அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.