தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்று தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ் நம்பிக்கை

சென்னை

முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க பணியாற்றுகிற அலுவலர்களின் துரிதமான, உறுதியான நடவடிக்கையால் கொரோனா தொற்று தமிழ்நாட்டிலிருந்து அகற்றப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தேனாம்பேட்டை மண்டலம், ஜெகதாம்பாள் காலனி மற்றும் முத்தையா தோட்ட பகுதியில் நடைபெற்று மருத்துவ முகாம்களை நேற்று நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு முககசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடுகள் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழிகாட்டுதலோடு தமிழகத்தின் முதலமைச்சர் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு சென்றடைய ஒரு உறுதியான நடவடிக்கை எடுப்பதினால் இன்றைக்கு சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக 15 மண்டலங்களிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் 81 சதவீதமாக இருக்கிறது.

அதில் குறிப்பாக 9-வது மண்டலம் தேனாம்பேட்டையில் 83 சதவீதமாக உள்ளது. இந்த மண்டலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். அதில் 83 சதவீதம் பேர் குணமடைந்து சென்று உள்ளனர். இதை போன்று மருத்துவ முகாம்கள் தொற்று கண்டறிய பயனுள்ளதாக இருக்கிறது என்பதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இதுவரை இந்த மண்டலத்தில் மட்டும் 1784 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 1.18 லட்சம் பேர் ஆய்விற்கு உட்படுத்திக் கொண்டனர் அதில் 5000 பேர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு, 4000 பேர் மட்டும் தான் தொற்று போன்ற நடவடிக்கைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் தினந்தோறும் கொடுக்கின்ற அறிவுரைகள், நடவடிக்கைகள், கண்காணிக்க ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் டி.ஆர்.ஓ அளவிலான 2 பேர் ஆகியோரை நியமித்தும், கீழ்மட்ட அளவில் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கின்ற அலுவலர்களை நியமித்தல் போன்ற உறுதியான நடவடிக்கை எடுத்ததினால் இந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் விழிப்புணர்வு நடவடிக்கையாக கிராமிய பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி போன்றவையால் தொற்று குறைய வழி ஏற்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய காச நோய் தடுப்பு நிறுவனமும் இணைந்து சென்னை மாநகராட்சியில் எலிசா (ELISA) பரிசோதனை 12000 நபர்களுக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இரத்தமாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதை போல் முதலமைச்சர் உத்தரவுக்கு இனங்க பணியாற்றுகிற அலுவலர்களின் துரிதமான, உறுதியான நடவடிக்கையால் கொரோனா தொற்று தமிழ்நாட்டிலிருந்து நாம் அகற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நம் மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே மூன்றடுக்கு முறையான மாநில கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராம கூட்டுறவு வங்கி என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எனவே இது மக்கள் பிரதிநிதியால் செயல்பட்டு வருகிறது. இதனை அப்படியே செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதிவிட்டார். ஏற்கனவே இருந்ததது போன்று கூட்டுறவு வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைபாடு தமிழக மக்களின் நலனை எல்லா காலங்களிலும் எந்த நிலையிலும் முதலமைச்சர் பாதுகாப்பார்”.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் முத்தையா தோட்ட பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை பார்வையிட்டு அங்கே அமைக்கபட்டிருந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முககசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடுகள் வழங்கி பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எப்படி பாதுகாப்புடன் இருப்பது குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் போது மண்டல கண்காணிப்பு அலுவலர் சுதன், துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன், சாந்தி, மண்டல அலுவலர் ஜே.ரவிக்குமார் மற்றும் தொடர்புடைய மண்டல அலுவலர்கள் உடனிருந்தனர்.