தற்போதைய செய்திகள்

கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு

கிராம மக்களுக்கு விழிப்புணர்வு- வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 8-கிராமப்புறங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

ஆய்வு கூட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எய்ம்ஸ் மருத்துவமனை, வடபழஞ்சி ஐடி பார்க், பல்கலைக்கழகம், விமான நிலையம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இப்படி இந்திய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சிறப்புக்குரிய அடையாளமாக விளங்கும் தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி ஆகும்.

அதுமட்டுமல்லாது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அடுத்த படியாக ஆஸ்டின்பட்டி மருத்துவமனை கொரோனா நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

கிராமப்புறங்களில் கொரோனோ நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. ஆகவே கிராமப்புறங்களில் கிருமி நாசினிகள், பிளீச்சிங் பவுடர்கள் அதிகமாக பயன்படுத்தி மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. ஆகவே தெருவிளக்கு, சாலை வசதி, உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். அதுமட்டுமல்லாது மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் இணைப்பு பணியினையும் விரைவாக முடிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான எந்த திட்டம் என்றாலும் என்னிடம் கூறுங்கள். நிச்சயம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று நிறைவேற்றி தருவேன்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

—————-