தற்போதைய செய்திகள்

கொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியிடமிருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதன்படி நேற்று அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை களை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதன் அடிப்படையில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளி மற்றும் தனிமை மட்டும் தான் இந்த நோய்க்கு தீர்வாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் முதலமைச்சர் தனது ஆய்வுக்கூட்டத்தில் வெளிமாநிலத்தில் உள்ள நமது மக்கள், மற்றும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுபோன்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் வெளிமாநிலங்களுக்கு நிகழ்ச்சிக்கு சென்று வந்த நபர்கள் அரசு அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இறைச்சி மற்றும் மளிகை கடைகளில் கூட்டம் சேர்ந்தால் அரசு கூறிய வசதிகளை பின்பற்றாதற்கு பேரிடர் மேலாண்மை சட்டம் மூலம் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடைஇல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் இடம் அளித்து அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

வேளாண் விவசாயபணிகள் தடையின்றி மேற்கொள்ள தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.வருவாய்த்துறை அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் அறிவுரைகளை ஏற்று அதற்கு தேவையான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறோம். தற்போது இருக்கும் நிலையில் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோள்.

விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, என்ற தாரக மந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ள மக்களுக்கு நாங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம், ஆயிரம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வரலாற்றில் இது ஒரு புதிய அனுபவம்.

இதுபோன்ற ஒருநிலையை நாம் இதுவரை கண்டதில்லை. உலக போரின் போது கூட 21 நாட்கள் ஊடரங்கு என்பது மக்கள் அறியாத ஒன்று. இப்படிப்பட்ட நிலையில் மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று.

கண்ணுக்கு தெரியாத எதிரியிடமிருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம். களத்தில் இருக்கக்கூடிய வருவாய்த்துறையின் 30 பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 3.50 லட்சம் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடன் வருவாய் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா இருந்தனர்.