தற்போதைய செய்திகள்

கொல்லிமலையில் பாரம்பரிய பல்லுயிர் பூங்கா – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவிப்பு

சென்னை

கொல்லிமலையில் பாரம்பரிய பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில்  வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியபோது வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

தமிழ்நாடு வனத்துறை 1855-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொலைதூர வனப்பகுதிகளில் வன அலுவலகங்கள், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் போன்ற கட்டடங்களை நிர்மாணிப்பதில் வனத்துறை முன்னோடித் துறையாக விளங்குகிறது. இவற்றில், 100 ஆண்டுகள் கடந்த சில கட்டிடங்களும் அடங்கும். இக்கட்டிடங்கள் வரலாற்று, சமூக கலாச்சார மதிப்பு, வடிவமைப்பு, கட்டுமான பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் மிகுந்த கட்டிடக்கலை / கலை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

இக்கட்டிடங்கள் காப்புக்காடுகள் மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. இது போன்ற கட்டிடங்களைப் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு முக்கிய கட்டமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இன்றி பாதுகாப்பது அவசியமாகிறது. மேலும் அதே இடத்தில் புதிய மாற்று கட்டிடங்களை கட்டுவதற்கு பதிலாக இந்த கட்டிடங்களை மேம்படுத்துவது அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை தவிர்க்க வழிவகை செய்யும். எனவே, தமிழக வனத்துறையில் உள்ள பழமையான 71 கட்டிடங்களை பாதுகாத்து, பராமரித்து, மேம்படுத்தி மறுசீரமைக்க இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆசியுடன், முதலமைச்சர் ஆணையின்படி ரூ.10 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

வனங்களின் எழில் மற்றும் வன உயிரினங்களை கண்டுகளிக்க புலிகள் காப்பகங்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு அரிய வாய்ப்பை நல்கி வருகிறது. செழிப்பாக உள்ள தாவர, வன உயிரினங்கள் மற்றும் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் குறித்த ஆராய்ச்சி, பயிற்சி, இயற்கைப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் புலிகள் காப்பகங்கள் வழிவகை செய்கின்றன.

இதனைத் தொடரும் விதமாக 2020-21-ம் ஆண்டில் முதலமைச்சர் ஆணையின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனக்கோட்டத்தில் ஒன்றும், முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒன்றும் கலை நயம் மிக்க கருத்து விளக்கக் கூடத்துடன் கூடிய சிறு கூட்டஅரங்கம் ரூ.7.00 கோடி செலவில் அமைக்கப்படும். உள் மற்றும் திறந்த வெளிக்கூடங்கள், கலந்துரையாடல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இது அமையப்பெற்றிருக்கும்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைப் பொறுத்தமட்டில், அரசு மற்றும் சத்தியமங்கலம் புலிகள் அறக்கட்டளை இடையே இச்செலவினமானது 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். முதுமலை புலிகள் காப்பகத்தைப் பொறுத்தமட்டில், அரசு மற்றும் முதுமலை புலிகள் அறக்கட்டளை இடையே இச்செலவினம் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. புலிகள் மற்றும் இதர விலங்கினங்களை வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் 24 மணி நேரமும் ரோந்துப்பணி மேற்கொண்டு வனங்களை பாதுகாத்து வருகின்றனர்.

1,100க்கும் அதிகமான வேட்டை தடுப்பு காவலர்கள், புலிகள் காப்பகங்களிலும் அதனருகில் உள்ள காடுகளிலும் தொடர்ச்சியாக பல நாட்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. அவர்கள் வனங்களில் தங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லை. எனவே, இப்பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் பொருட்டு புலிகள் காப்பகங்களில் போக்குவரத்து முகாம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தங்குமிடம், சமையலறை, உணவருந்தும் அறை, கழிப்பறை, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு அமையவுள்ள இப்போக்குவரத்து முகாம், வனப்பாதுகாப்பில் ஈடுபடும் முன்னிலை களப்பணியாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் அமையும். இத்தகைய வசதிகள், வனப்பணியாளர்களை, அவர்கள் திறமையான முறையில் பணிகளை செய்வதற்கு ஊக்குவிக்கும். எனவே, முதலமைச்சர் ஆணையின் படி, புலிகள் காப்பகத்திற்கு தலா ஒன்று வீதம் 4 போக்குவரத்து முகாம்கள் ரூ.6.00 கோடி செலவில் அமைக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ள கொல்லிமலையில், சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரக்கூடிய தலமான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை அதிக அளவில் கவரும் நோக்கில், முதலமைச்சர் ஆணையின்படி கொல்லிமலையில் பாரம்பரிய மற்றும் பல்லுயிர் பூங்கா, சூழலமைப்பிற்கேற்ற பாலம், மருத்துவ தாவரப்பூங்கா, பழங்குடியினர் அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாடும் இடம், பூங்கா போன்றவை ஆகாய நீர்வீழ்ச்சி பகுதியில் 2020-2021-ம் ஆண்டில் ரூ.3.00 கோடி செலவில் உருவாக்கப்படும். மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக கொல்லிமலை திகழ்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவித்தார்.