தற்போதைய செய்திகள்

கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு வராது – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்

சென்னை

கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு வராது என்று பேரவையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  கேள்வி நேரத்தின்போது நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர்
நாமக்கல் மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே சொந்த கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாமக்கல் கால்நடை பராமரிப்பு துறை மண்டல ஒருங்கிணைந்த இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நாமக்கல் மண்டலம் எர்ணாபுரத்தில் 85 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையிடம் கட்டிடம் கட்டுவதற்கான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

2020 -21 ம் நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் பட்சத்தில் ஒருங்கிணைந்த நாமக்கல் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகம் கட்டப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் கொரோனா வைரஸ் வதந்தியில் முட்டை ரூ.1.50 க்கு, கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.15 க்கும் குறைந்து விட்டன. விலைகள் அதலபாதாளத்திற்கு குறைந்ததால், நாமக்கல்லில் கோழிப் பண்ணை வைத்துள்ளவர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாமக்கல் கோழிப் பண்ணை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கோழி, முட்டை விலை குறைந்ததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே முதல்வரின் கவனத்திற்கு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கொண்டு சென்று அவரிடம் முறையிட்டுள்ளனர். அது தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டசபையில் தெளிவாக பதில் அளித்துள்ளார். கோழிகளை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வருவதில்லை. கோழி முட்டை, கறி கோழி சாப்பிடும் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள் தெளிவாக பதில் அளித்துள்ளனர். கோழி பண்ணைக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.