தற்போதைய செய்திகள்

கோவையில் `கொரோனா’ தாக்கம் குறைந்து வருகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட முகாம் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்திலும், பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளில் எவ்வித சுணக்கமும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளான உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலம் பணி, கோயம்புத்தூர் திருச்சி பிராதான சாலையில் ஸ்டாக் எக்சேன்ஜ் – லிருந்து ரெயின்போ வரையிலான மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை 1 கி.மீ நீளத்திலான உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி மானிய விலையில் வீடுகளை கட்டிக்கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டாமாறுதல், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணியினை வருவாய்துறையினர் உரிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் குறிச்சிக் குளக்கரை பொலிவுபடுத்தும் பணி, பந்தயசாலையில் சிந்தட்டிக் நடைபாதை, உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகளை குறித்த காலத்திற்கு முன்னதாகவே முடித்திட வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும். மேலும் நொய்யல் ஆற்றினை புனரமைக்கும் பணி, பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தித்திட்டம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியே பின்பற்றுதல் மற்றும் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்தல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் ஆற்றங்கரையோரங்களில் குடியிருக்கும் பொதுமக்களை கனமழையின் போது பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை (1077) தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு உடனடியாக தேவைப்படும் உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகர காவல் துணை ஆணையர் கோ.ஸ்டாலின், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.