சிறப்பு செய்திகள்

சட்டசபை கூட்டத்தொடர் 5-ந்தேதி வரை நடைபெறும் – பேரவைத்தலைவர் ப.தனபால் அறிவிப்பு

சென்னை

சட்டசபை கூட்டத்தொடர் 5-ந்தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். பேரவைக் கூட்டம் முடிவடைந்ததும் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் நடைபெற்றது.

இதன் பின்னர் பேரவைத்தலைவர் ப.தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த ேபட்டி வருமாறு:-

சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆளுநர் உரை நிகழ்த்தினார், மீண்டும் இன்று காலை 10 மணிக்கு அவை கூடும். இன்றைய கூட்டத்தில் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

இதன் பின்னர் முன்னாள் வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு, பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்படும். இதன் பின்னர் பேரவை ஒத்தி வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து 4-ந்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். 5-ந்தேதியும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை இடம் பெறும். இதைத்தொடர்ந்து சட்ட முன்வடிவுகளை ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் ஏனைய அரசினர் அலுவல்களும் இடம் பெறும்.

இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் கூறினார்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனிடம் பேசியதாகவும், ஆளுநர் உரை விவாதத்தில் தி.மு.க. பங்கேற்கப் போவதில்லை என்று அவர் கூறியதாகவும், பேரவை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திமுக மேற்கொண்ட முடிவு அவர்களது உரிமை என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.