தமிழகம்

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற கழக கொடியேற்று விழா, கோவில் கும்பாபிஷேக பெருவிழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க நேற்று காலை வருகை தந்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் எச்.புதுப்பட்டியில் தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள 33 அடி கொடி கம்பத்தில் கழக கொடியை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றி வைத்தார்.

அதைத்தொடர்ந்த அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு, தருமபுரி மாவட்ட கழக பொருளாளர் நல்லத்தம்பி வெள்ளி வீரவாளை நினைவு பரிசாக வழங்கினார்.

கழகத்தினர் சிறப்பான வரவேற்பை ஏற்றுக்கொண்ட கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்தது போல் கழக அரசு 100 ஆண்டு காலம், அதற்கு மேலும் சிறப்பாக செயல்படும். அம்மா மறைவிற்கு பின்பு அ.தி.மு.க., ஆட்சி ஓரிரு, மாதங்களில் கலைந்து விடும் என்று அப்போது ஸ்டாலின் தெரிவித்து வந்தார். ஆனால் பொதுமக்கள் ஒத்துழைப்போடு நான்காண்டு முழுவதும் சிறப்பான ஆட்சியை வழங்கினோம்.

தி.மு.க., தற்போது ஏதோ சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்து விட்டது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்த விதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கழக அரசால், நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது ஸ்டாலின் திறந்து வைத்து கொண்டிருக்கிறார்.

நான் போட்ட திட்டங்களுக்கு தான் அடிக்கல் நாட்டி கொண்டிருக்கிறார். அனைவரும் கூறுவது போல் ஸ்டிக்கர் ஓட்டுகின்ற வேலையைத்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

கழக ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் நகரங்களுக்கு இணையான திட்டங்களை, கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தியது. தரமான சாலைகள் அமைக்க திட்டம், வேளாண் பெருமக்கள் பயன்படும் வகையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் குடிமராமத்து திட்டங்கள் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது தி.மு.க., ஆட்சியில் இத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. இல்லம் தோறும், குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்து அதற்கு பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்து, 48 லட்சம் பேர் ஸ்டாலின் வாக்குறுதியை நம்பி, ஐந்து சவரன் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து அந்தப் பணத்தை செலவு செய்துவிட்டு தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். தற்போது, 13 லட்சம் பேருக்கு தான் நகை கடன் தள்ளுபடி என்று கூறுகிறார்கள்.

அதிமுக அரசு எப்போதுமே பொதுமக்களுக்கு துணை நிற்கும். கழக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் புதிய அரசு கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசு லஞ்சத்திலும், சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதிலும், போதை பொருள் விற்பனையிலும், சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதிலும் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.