மதுரை

சாதனை படைத்து வரும் கழக அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனம் வராது – வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு

மதுரை

சாதனை படைத்து வரும் கழக அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனம் வராது. காணொலியில் தோன்றி குறை மட்டுமே கூறுவார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மேலூர் தொகுதியில் உள்ள கழகத் தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி மேலூரில் நடைபெற்றது. மேலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குலோத்துங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலுர் நகர செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வல்லாளப்பட்டி பேரூர் கழக செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கழக தொண்டர்களுகு்கு தீபாவளி பரிசு வழங்கி பேசியதாவது:-

ஸ்டாலின் தினந்தோறும் காணொலி காட்சி மூலம் பல்வேறு பொய்யான பிரச்சாரத்தை பரப்புகிறார். புரட்சித்தலைவி அம்மா கடந்த காலங்களில் காணொலி காட்சி மூலம் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தபோது அதை கேலி செய்தார். ஸ்டாலின் தற்போது அந்த காணொலி காட்சி மூலம் தான் ஸ்டாலின் இன்றைக்கு கட்சியை நடத்துகிறார்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும் மக்களுக்கு செய்யவில்லை ஆனால் தற்பொழுது தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வாரி வழங்கி வருகிறார். அதை பாராட்ட மனமில்லாமல் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.நீட் தேர்வை திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதை சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியபோது ஸ்டாலின் பதில் சொல்ல முடியாமல் திணறினார். தற்போது அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி மருத்துவ படிப்பில் அரசுப் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கியவர் முதலமைச்சர் அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு நீங்கள் கடுமையாக உழைத்து வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் அம்மா ஆட்சி மலரும்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.