சாலைகளில் ராட்சத பள்ளங்கள்: சேறும், சகதியுமான பஸ் நிலையம் -உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது என பொதுமக்கள் குமுறல்

திருவாரூர்
திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. ஆரம்பம் முதலே திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அமைவதில் பிரச்சினைகள் இருந்து கொண்டே வந்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை ஏற்படுத்தப்படவில்லை.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டுமென பொதுமக்களும் வர்த்தகங்களும் கோரிக்கை விடுத்த நிலையில் அதுவும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய பேருந்து நிலையம் செல்வதே மிகப்பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாக திருவாரூரில் அவ்வப்போது சில மணி நேரங்கள் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகளே மிகவும் மெதுவான வேகத்தில் இயக்கினாலும், பேருந்துகள் குலுங்கி பயணிகள் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழும் நிலை நிலவுகிறது.
இருசக்கர வாகனங்கள் செல்வோர் நிலை தடுமாறி சாலையில் கீழே விழும் சூழலும் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வந்தால் பஞ்சர் ஒட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு பெய்த மழையில் இதே சாலை சேதமடைந்தது. தற்போதும் அதே இடத்தில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் புதிய பேருந்து நிலையம் சென்று பேருந்து ஏறுவதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் விசாரித்த போது. நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த பணியும் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் சாலைகளை சரி செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர். ஆனால் பொதுமக்களோ நீதிமன்றம் எப்போது தீர்ப்பு வழங்குவது.? சாலை எப்போது சரி செய்யப்படும்.? அதுவரையில் இந்த சாலையில் சென்றால் உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது என பொதுமக்கள் குமுறுகின்றனர்.