தற்போதைய செய்திகள்

சிட்லபாக்கத்தில் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் தொண்டர்கள் திரண்டனர்

செங்கல்பட்டு,

சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சிட்லபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கடந்த ஓராண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி தி.மு.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், சிட்லபாக்கம் – செம்பாக்கம் பகுதிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமை தாங்கினார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணை செயலாளருமான பா.தன்சிங் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசியதாவது:-

சிட்லபாக்கம் ஏரியை மேம்படுத்துவதற்காக கழக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள் கழக ஆட்சியில் துரிதமாக நடைபெற்றன.

ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பணிகள் எதுவும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இத்தகைய மெத்தன போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம். கிடப்பில் போடப்பட்ட சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்தப்படுத்த வேண்டும்.

அதேபோல் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சிறப்பான திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இதுதான் தி.மு.க.வின் சாதனையாக இருக்கிறது. வேறு சாதனை எதுவும் அவர்கள் செய்யவில்லை. கழக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். கழக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொண்டுவந்த திட்டங்களுக்கு தான் இவர்கள் ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என தலைவிரித்தாடுகிறது. இலங்கையில் எப்படி இன்றைக்கு ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கிறதோ அதேபோன்ற ஒரு புரட்சி தமிழ்நாட்டில் நிச்சயம் வரும்.