தமிழகம்

சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு-முதலமைச்சர் இரங்கல்

சென்னை,

சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான, சேலம் மாவட்டத்தை சேர்ந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று (10.2.2021) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனைஅடைந்தேன். சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் நேரிடையாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தவர். இவர் மட்டுமின்றி, இவரது குடும்பமே சித்த வைத்தியத்தில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருவது பாராட்டிற்குரியது.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்’
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க சிவராஜ் சிவக்குமார் சித்த வைத்தியத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவு சித்த மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும். சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.