சிறப்பு செய்திகள்

சிறந்த நிர்வாகத் திறன் மிக்க மாநிலம் தமிழகம்-சட்டப்பேரவையில் ஆளுநர் பாராட்டு

சென்னை, பிப். 3-

இந் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முறைப்படி பேரவைத் தலைவர் ப.தனபால், பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அழைத்து வந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவை கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். காலை 11.06 மணிக்கு தொடங்கிய அவரது உரை 12.02 மணிக்கு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆளுநரின் ஆங்கில உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் ப.தனபால் தமிழில் வாசித்தார். 12.03 மணிக்கு தொடங்கிய பேரவைத்தலைவரின் உரை 1.05 மணிக்கு முடிவடைந்தது. இக்கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

சட்டபேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை வருமாறு:-

தைப்பூசம் என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒரு முக்கியமான பண்டிகையாகும். மேலும், பல்வேறு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, தைப்பூசம் பண்டிகை தினத்தை பொது விடுமுறையாக இந்த அரசு அறிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, 11,464 திருக்கோயில்களில் 551 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் சேதமடைந்த சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோயிலின் திருக்குளச் சுற்றுச் சுவர் 2.61 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

நிவர் மற்றும் புரெவி புயல்களின் காரணமாக சேதமடைந்த நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர்கள் 4.34 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஹஜ் மற்றும் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவியை அரசு உயர்த்தியுள்ளது.

மொழிவாரி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், உரிய சட்டத்தின் மூலம் மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுபடுத்தப்படும். கடந்த 2020-ம் ஆண்டு மனிதகுல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து, உறுதியுடனும், மனதைரியத்துடனும், நாம் மீண்டு வருவோம். வரும் ஆண்டுகளில் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் புத்துயிர் காணுவோம் என்ற நம்பிக்கையில், நம் தேசத்தின் மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழக மக்கள், இந்த முன்நிகழ்வில்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று மீட்புப் பணிகளில் அயராது உழைத்த சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் பங்களிப்பிற்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது. பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று, வெற்றிநடை போடுகிறது தமிழகம்.

தமிழ்நாடு முதலமைச்சரின் தன்னிகரற்ற தலைமையின் கீழ், சிறப்பாகச் செயல்படும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் தமிழ்நாட்டின் 15-வது சட்டமன்றத்தின் நிறைவு கூட்டத் தொடரில் கூடியுள்ளோம். அரசின் சார்பாக, பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் நான் எடுத்துரைத்துள்ளேன். இந்த அரசு, பெருமைப்படும் விதமாக பல சாதனைகளைப் புரிந்துள்ளது.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.