தற்போதைய செய்திகள்

சிறுபான்மையின மக்களின் காவலனாக கழகம் என்றென்றும் துணை நிற்கும்

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

திண்டுக்கல்

சிறுபான்மையின மக்களின் காவலனாக கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதிபட தெரிவித்தார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று காலை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வியிடம் வழங்கினார் .உடன் மாநில கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் பிரேம்குமார் இருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கழக அரசு கொரோனா காலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கியதோடு நோய் தீவிரமாக பரவாமல் தடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2500 வழங்கப்பட்டது. தற்போது குடும்பத்திற்கு வருடம் 6 சிலிண்டரும், மாதம் ரூ.1500 என வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

சுமார் 16 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் 6 பவுன் தங்க நகை கடன் தள்ளுபடி எனவும் அறிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் வரப்பெற்று அதில் திண்டுக்கல்லில் முதல் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.

சிதிலமடைந்து கிடந்த காந்தி மார்க்கெட் நவீன மயமாக்கப் பட்டுளளது. 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலையே இல்லாத பகுதிகள் அனைத்திலும் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றி தினசரி காலை மாலை என இரு வேளையிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றியப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் புதிய குடிநீர் பைப் இணைக்கப்பட்டு தினந்தோறும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கலில் ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் ஹைதர் அலி திப்பு சுல்தான் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பேகம்பூர் ஓரியண்டல் பள்ளி கல்வி வளர்ச்சிக்காக அரசிடமிருந்து ஒரு ஏக்கர் ஐந்து சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பேகம்பூர் பெரிய பள்ளிவாசல், முகமதியாபுரம் பள்ளிவாசலுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் மயானம் கட்டுவதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் இருந்த டவுன் ஹாஜியார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் பயணத்திற்கான மானியத் தொகை உயர்த்தி வழங்குவதற்கான பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் பேகம்பூர் பகுதி மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்க செய்ததோடு அவர்களின் இன்னல்களை அறவே நீக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசேலம் புனிதப் பயணத்திற்கான மானிய தொகை உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் சிறுபான்மையின மக்களின் காவலனாக கழக அரசு என்றென்றும் திகழும். சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக கழகம் இருக்கும். எனவே கழக அரசின் எண்ணற்ற சாதனைகளால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் 214 இடங்களுக்கு மேல் அமோக வெற்றியை பெற்று மீண்டும் கழகம் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், ஒன்றிய கழக செயலாளர் ராஜசேகரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இக்பால், அரசு வழக்கறிஞர்கள் மனோகரன், பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.