தற்போதைய செய்திகள்

சிவகாசி அருகே படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

விருதுநகர்

சிவகாசி அருகே நகைக்காக படுகொலை செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மனைவி பிரகதிமோனிகா குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ரூ.3 லட்சத்தை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்த செல்வமணிகண்டன் (26) இவர் திருத்தங்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் இளம்பெண்கள் எழுச்சி பாசறையின் நகர துணை செயலாளராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி பிரகதி மோனிகா (24) திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. கடந்த வாரம் பிரகதி மோனிகா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், தாலி திருடு போனது. டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியின் போது திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்த கோடீஸ்வரன் (20), சேகர் (19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இருவரும் செலவிற்கு பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டு கொலை செய்ததாக தெரிவித்தனர். இவர்களுக்கு கோடீஸ்வரன் தாயார் பரமேஸ்வரி (40) உதவி செய்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருத்தங்கல் சத்யாநகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் பிரகதிமோனிகாவின் வீட்டிற்கு நேற்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தை பிரகதிமோனிகாவின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

பிரகதிமோனிகாவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கொலையில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தின் முன் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.