சிறப்பு செய்திகள்

சேலம் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

சேலம்

சட்டமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் தொடர்பாக சேலத்தில் கழக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன் தினம் சேலம் வருகை தந்தார். பின்னர் அவர் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் கழக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இதன் பின்னர் கெங்கவல்லி தொகுதி கழக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தம்மம்பட்டி பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். இதன்பின்னர் ஆத்தூர் தொகுதி கழக வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து ஆத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கழக அலுவலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்தார். அங்கு அவருக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் பணி குறித்தும், பிரச்சார வியூகங்கள் குறித்தும் முதலமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் சேலம் மாநகர் மாவட்ட, புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி தேர்தல் பிரச்சார பணிகளை முடுக்கி விட்டார்.