சேலம்

சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு தாக்குதல்-சேலம் தி.மு.க. நிர்வாகிகள் மீது ஆட்சியரிடம், வியாபாரி புகார்

சேலம்

சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு தி.மு.க. நிர்வாகிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம், பருத்தி வியாபாரி புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, கள்ளுக்காரன் காடு பகுதியை சேர்ந்த பருத்தி வியாபாரி கதிர்வேல். இவர் தனது மகளின் மஞ்சள்நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

அப்போது, இவரது உறவினரான சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் கண்ணன் மற்றும் அவரது சகோதரரும் மகுடஞ்சாவடி தி.மு.க. கிளை செயலாளருமான வெங்கடேஷ் ஆகியோரும் அடியாட்களுடன் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், கதிர்வேலின் சகோதரர் சிவக்குமாரை கடுமையாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கதிர்வேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

தி.மு.க. நிர்வாகிகளான கண்ணன் மற்றும் அவரது சகோதரர் வெங்கடேஷ் ஆகியோர் தனது சகோதரியின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அதற்கு இடையூறாக உள்ள தங்களை முடக்குவதற்காக தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டினர்.

எந்த நேரத்திலும் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.