தமிழகம்

சொன்னதை செய்வது தான் அம்மா அரசின் லட்சியம்-முதலமைச்சர் பேச்சு

விழுப்புரம்

சொன்னதை செய்வது தான் அம்மா அரசின் லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை துவக்கி வைத்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மரக்காணம் அழகன்குப்பம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை வருமாறு:-

தமிழகத்திலேயே முதன் முதலில் கிராமப்புற மக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்குகின்ற ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம் என்பதை குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, அம்மாவின் அரசு எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் தனி கவனம் செலுத்தி, எத்தனை கோடி செலவு என்பதல்ல, கோடியில் இருக்கின்ற மக்களுக்கும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ 1,550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதனால், விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள், மரக்காணம், விக்கிரவாண்டி பேரூராட்சிகள் மற்றும் மரக்காணம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, காணை ஒன்றியத்திலுள்ள 692 ஊரக குடியிருப்புகள் சிப்காட், திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று ஏறத்தாழ 10 லட்சம் பேர் குடிநீர் பெறுகின்ற அற்புதமான திட்டம் உங்களுக்கு இன்றைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண விஷயமல்ல, பல ஆண்டுகளாக நீங்கள் காத்திருந்த திட்டம், நீங்கள் எண்ணியிருந்த திட்டம், தங்களுக்கு குடிநீர் வருமா? வராதா? என்று ஏங்கிக் இருந்த அந்த ஏக்கத்தைப் போக்கிய அரசு அம்மாவின் அரசு.

அதேபோல குடிமராமத்து எனும் அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் அனைத்தையும் விவசாயிகளின் பங்களிப்போடு தூர்வாரப்பட்டு பொழிகின்ற மழை நீர் முழுவதும் தேக்கி வைத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்தக் கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

அந்த வகையில் வீடூர் அணை முழு கொள்ளளவை மீட்டெடுக்கும் பொருட்டு ஏறத்தாழ 109 கனஅடி நீர் தேக்கி வைப்பதற்காக 43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்ட மக்கள் என்ன எண்ணுகிறார்களோ, இந்த மக்களுக்கு எந்த திட்டத்தின் வாயிலாக நன்மை கிடைக்கிறதோ, அந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுகிற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல, மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தவிர்க்க மரக்காணம் வட்டம், அழகன் குப்பத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்த அந்த கோரிக்கையை ஏற்று 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அம்மா அரசு மீது தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன செய்தது என்று கேட்கிறார்.

அம்மாவின் அரசு என்னென்ன செய்திருக்கிறது என்று புள்ளி விவரத்தோடு இந்த மண்ணின் மைந்தர், உங்கள் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இங்கே தெரிவித்தார். நாங்கள் எதைச் செய்வோம் என்று நினைக்கிறோமோ அதை சொல்வோம், சொன்னதை செய்கிறோம், அதுதான் எங்கள் அரசின் நோக்கம், லட்சியம், அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, குடிமராமத்து திட்டத்தின் மூலம் 38 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

நான் ஓராண்டுக்கு முன்பு வந்தபோது குப்பைமேடாக இருந்த இந்தப் பகுதியை, இது நகரத்தின் மையப் பகுதியாக இருப்பதனால், நிதி ஒதுக்கீடு செய்து, இப்பகுதியில் அருமையான பூந்தோட்டம் அமைக்க வேண்டுமென்று அமைச்சர் சி.வி.சண்முகம் வைத்த கோரிக்கையை ஏற்று, அற்புதமான வடிவமைப்புடன், விளையாட்டரங்கம், விநாயகர் சிலை ஆகியவற்றுடன் கூடிய பூந்தோட்ட குளப் பூங்கா அமைத்துள்ளோம். ஸ்டாலின் அவர்களே இந்த குளத்தை வந்து பார்த்துவிட்டு அண்ணா திமுக அரசைப் பற்றி சொல்லுங்கள்.

இங்கேயுள்ள மக்கள் சொல்வதைப்போல உங்கள் பிரதிநிதி பொன்முடியை அனுப்பி இந்த குளத்தை பார்த்து செல்லச் சொல்லுங்கள். இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பொருந்தும்.

அதுமட்டுமல்ல, ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் இருக்கின்ற பகுதியிலேயே மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டு மென்பதற்காக ஒரே காலகட்டத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகளைக் கொண்டுவந்த அரசு அம்மாவின் அரசு. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 53 அம்மா மினி கிளினிக்குகளை கொடுத்திருக்கிறோம்.

இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருமக்கள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று, அம்மாவின் அரசு, விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் ரத்து செய்யப்படுமென்று அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் 152 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 65,410 விவசாயிகள் பயிர்க்கடன் வாங்கியிருக்கிறார்கள், 212 விவசாயிகள் நகை பயிர்க்கடன் வாங்கியிருக்கிறார்கள். மொத்தம் 65,622 விவசாயிகள் இந்த மாவட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள். ரத்து செய்யப்பட்ட கடன் தொகை ரூபாய் 451 கோடி ஆகும்

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.