சிறப்பு செய்திகள்

ஜனநாயக விரோத நடவடிக்கையை தி.மு.க. அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்-எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

சென்னை,

ஜனநாயக விரோத நடவடிக்கையை தி.மு.க. அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

திமுக அரசு பொறுப்பேற்று முழுமையாக 90 நாட்கள் முடிவடையாத நிலையில் திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இன்றைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது எப்படியாவது பொய் வழக்கு தொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது இல்லத்தில் ரெய்டு நடைபெற்றுள்ளது. அரசியல் ரீதியாக எதிர்கொண்டு எங்களை சந்திக்க முடியாத திமுக, இப்படி அச்சுறுத்தல் காரணமாக எந்த நிலையிலும் எங்களை எதிர்கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு கழகம் தயாராக இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகைளை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு கழகம் தயாராக இருக்கிறது என்பதை நாங்கள் தெளிவாக சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த 10 ஆண்டு காலம் தமிழகத்தின் ஜீவதார உரிமைகளுக்கு ஊறு வந்தபோது அதை காப்பாற்றுவதற்கு அம்மாவின் அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் எவ்வாறு எடுத்து வெற்றி கண்டது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

ஒரு அரசியல் இயக்கம், அந்த இயக்கம் ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது தமிழக மக்களின் உரிமைகளையும், தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளையும், காப்பாற்றும் அரசாக அம்மாவின் அரசு தான் விளங்கியது என்பது தான் வரலாறு. அந்த வரலாற்றை அம்மா அவர்கள் எவ்வாறு எல்லாம் நிலை நிறுத்தினார். தமிழக மக்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் நிலை நிறுத்தினார் என்பதை அனைவரும் நன்றாக அறிவோம்.

தமிழக விவசாயிகளை காப்பதற்காக அம்மா அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்தவரும் அம்மா அவர்கள் தான். தஞ்சையில் மீத்தேன் எரிவாயு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்த போகிறது என்பதை கவனத்தில் கொண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதனை தடுத்து நிறுத்துவதற்கு அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

மக்களின் இன்னல்களை களையக்கூடிய அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். முன்னாள் அமைச்சர் வீட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்வு மிகவும் கண்டனத்திற்குரியது.

எந்த ஒரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது அது மிகபெரிய அபாயகரமான சூழ்நிலை அரசியல் ரீதியாக உருவாவதற்கு அடித்தளமாக அமையும் என்பது ஏற்கனவே தமிழகத்தில் நல்ல பாடமாகவே இருந்திருக்கிறது. ஆகவே புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முறையாக, ஜனநாயக ரீதியில் ஆட்சி நடத்திய கழகத்தின் மீது பழி வாங்கும் நடவடிக்கையை தொடுத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி-நீட் தேர்வு ரத்து என்ற அறிவித்து விட்டு தற்போது இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற நிலையை திமுக எடுத்துள்ளது குறித்து?

பதில்-இன்றைக்கு தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலினிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

நாங்கள் பல்வேறு முறைகளில், பல்வேறு கால கட்டங்களில் கடிதங்கள் வாயிலாகவும், கோரிக்கை வாயிலாகவும், இதனை முதலமைச்சரிடம் கேட்டுள்ளோம். முறையாக பதில் வந்து சேரவில்லை.

கேள்வி-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு என்பதை எப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்ல முடியும்.

பதில்-இந்த ரெய்டு விவகாரத்தை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் அவர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை செய்துள்ளார்கள். இதற்கு உரிய பரிகாரம் நீதிமன்றம் மூலம் பெறப்படும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.