தற்போதைய செய்திகள்

ஜப்தி செய்த விவசாயி வீட்டை மீட்டுக் கொடுத்த அமைச்சர்- மதுரை அருகே நெகிழ்ச்சி சம்பவம்

மதுரை

மதுரை அருகே ஜப்தி செய்த விவசாயி வீட்டை அமைச்சர் மீட்டுக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளத

மதுரை மாவட்டம், கூ.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது மகள் திருமண செலவு மற்றும் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார்.

கடனையும் திருப்பி செலுத்தி வந்தார். இந்த நிலையில் கேரளாவில் பணியாற்றிய அவரது மகனுக்கு கொரோனாவால் வேலை பறிபோனதால் போதிய வருமானமின்றி விவசாயி செல்வராஜ் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார்.

இதனால் தனியார் வங்கி கடனை திரும்ப பெற நீதிமன்றத்தை நாடியது. மேலும் வங்கி ஊழியர்கள் நீதிமன்றம் உத்தரவின் பேரில் நேற்று சொக்கம்பட்டியில் உள்ள விவசாயி செல்வராஜ் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்களுடன் வந்தனர்.

அவர்கள் வீட்டில் இருந்தவர்களை வெளியேறும்படி கூறியதால் செய்வதறியாது செல்வராஜ் குடும்பத்தினர் தவித்தனர். வங்கி ஊழியர்களிடம் கடனை திரும்ப செலுத்த சிறிது கால அவகாசம் கேட்டு மன்றாடினர். பாக்கி பணத்தை செலுத்தாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்க முடியாது என கூறி விட்டனர்.

அப்போது கள்ளிக்குடி புதிய வட்டாட்சியர் அலுவலக பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவ்வழியே சென்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூட்டமாக இருப்பதை பார்த்து காரை நிறுத்தினார். காரை விட்டு கீழே இறங்கிய அமைச்சர் விவசாயிக்கு பணம் செலுத்த அவகாசம் தரும்படி கேட்ட போது குறிப்பிட்ட ஒரு தொகையாவது கொடுக்க வேண்டும் என வங்கி பணியாளர்கள் கூறினர்.

இதையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்னலில் தவித்த விவசாயி குடும்பத்தை காப்பாற்ற தானாக முன் வந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொடுத்து உதவியதுடன் வங்கி ஊழியர்களிடம் பேசி கால அவகாசமும் பெற்று கொடுத்து சென்றார்.

கடனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருந்த விவசாயி செல்வராஜ் குடும்பத்தை உரிய நேரத்தில் வந்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான நிகழ்வை பார்த்த பொதுமக்கள் மற்றும் செல்வராஜின் குடும்பத்தினர் அமைச்சருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.