சிறப்பு செய்திகள்

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மருத்துவரிடம் நலம் விசாரித்தார்

சென்னை

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மருத்துவரிடம் நலம் விசாரித்தார்

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2ம்தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமானது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜெ.அன்பழகன் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரை தொடர்புகொண்டு அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஓமந்தூரார் மருத்துவமனை டீன் நாராயண பாபுவுடன் மருத்துவமனைக்குச் சென்று ஜெ.அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் காலையிலேயே ரேலா மருத்துவமனை தலைமை மருத்துவரைத் தொடர்பு கொண்டு அன்பழகனின் உடல் நிலை எவ்வாறு இருக்கிறது. இன்னும் அரசின் உதவி என்ன தேவைப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் உடல் நிலை தேறி வர வேண்டும் என்கிற ஆவலை வெளிப்படுத்தினார். முதல்வரின் உத்தரவுப்படி அன்பழகனின் உடல்நிலை குறித்து நேரில் மருத்துவமனைக்குச் சென்று நான் நலம் விசாரித்தேன். என்னுடன் ஓமந்தூரார் டீன் நாராயணபாபு உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் வந்தனர்.

தலைமை மருத்துவர் உள்ளிட்டோரிடம் 20 நிமிடத்திற்கு மேலாக அன்பழகன் உடல் நிலை குறித்தும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் நான் ஆலோசனை நடத்தினேன். அவரது மகனிடமும் நலம் விசாரித்தேன். அவர் முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.வதந்திகள் கிளம்புவது குறித்து தலைமை மருத்துவர் விளக்கம் அளிப்பார்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து ரேலா மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறுகையில், இன்று ( நேற்று) காலையில் முதல்வர் என்னிடம் பேசினார். சுகாதாரத் துறை அமைச்சரும் நேரில் வந்து ஆலோசனை செய்தார். ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறது. தேவையான மருந்துகள் தருவதாக அரசு சொல்கிறது என்று தெரிவித்தார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அன்பழகன் எம்.எல்.ஏவிரைவில் குணமடைந்து பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.