தற்போதைய செய்திகள்

டீ கடை, உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதி- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 75 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம், டீ கடை, உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவருந்தலாம், காய்கறி, மளிகை கடைகள் கூடுதலாக ஒரு மணி இயங்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

I) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் (Except ContainmentZones) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

1) தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

2) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக்கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

3) ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

4) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

5) ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

6) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (E-Commerce) மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.