சிறப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்த இளைஞருக்கு பதக்கம், சான்றிதழுடன் ரூ.1 லட்சம் – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய
6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான 2019- ம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

நீரில் மூழ்கி விபத்து, தீவிபத்து, மின்சார விபத்து, நிலச் சரிவுகள், விலங்குகளால் தாக்கப்படுதல் மற்றும் சுரங்க விபத்து போன்ற அபாயகரமான விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்க தைரியமாகவும், மன வலிமையுடனும் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய அரசால் “ஜீவன் ரக்ஷா பதக்” என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொண்டதாகும்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அவ்வழியாக சென்ற ஆர்.ஸ்ரீதர், நீரில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக ஏரியின் கரைக்கு இழுத்து சென்று ஆறு பேரையும் காப்பாற்றினார். நீச்சலில் எவ்வித முறையான பயிற்சியை பெறாத நிலையில், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உயிரை காக்க தனது உயிரைப் பணயம் வைத்து ஆர்.ஸ்ரீதர் காப்பாற்றியுள்ளார்.

இவ்வீர, தீர செயலுக்காக தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருதுக்கு இவரது பெயரை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது. இப்பரிந்துரைக்கு இந்தியக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, முதலமைச்சர் நேற்று ஆர்.ஸ்ரீதருக்கு 2019-ம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்கள்.

இன்றையதினம் “ஜீவன் ரக்ஷா பதக்” விருது பெற்ற ஆர்.ஸ்ரீதர், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது, தமிழ்நாடு அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில் குமார், பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) ஏ.ஆர்.ராஹுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.