தற்போதைய செய்திகள்

தன்னம்பிக்கையுடன் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்வடைய முடியும் – மாணவர்களுக்கு நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் அறிவுரை

மதுரை

தன்னம்பிக்ைகயுடன் படித்தால் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்று மாணவர்களுக்கு நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் அறிவுரை வழங்கினார்.

கழக செய்தித்தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் பேசியதாவது:-

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் தோழமையுடன் இருக்க வேண்டும், கட்டுப்பாடு விதைத்து விதையில் வெந்நீர் ஊற்றி அழிக்கக்கூடாது. பயமில்லாமல் பிள்ளைகளை வளர்த்தால் அந்த பிள்ளை குற்றவாளி ஆகாது. பயத்தோடு வளர்த்தால் அந்த பிள்ளை கெட்டுப்போகும். ஒரு மாணவனுக்கு ஆசிரியர் தட்டிக்கொடுக்க வேண்டும். பெற்றோர் தோழமையுடன் இருக்க வேண்டும். அதேபோல் நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும். இது இருந்தால் அந்த மாணவன் மிக உச்சத்துக்கு போவான்.

மதுரை வீரம், விவேகம் செறிந்த மண். இங்கு கோழைத்தனம் இருக்காது. அப்படிப்பட்ட ஊரில் இனிமேல் இதுபோன்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இருக்கக்கூடாது. மதுரை மண்ணில் பிறந்த சின்னப்பிள்ளை காலில் தான் நமது முன்னாள் பாரதப் பிரதமர் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அந்த சின்னப்பிள்ளையின் தன்னம்பிக்கையை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தாளம் போட்டால் அவன் இசைத்துறையில் நிச்சயம் சாதனை படைப்பான். யாருக்கும் கட்டுப்பாட்டை திணிக்கக்கூடாது. கிறிஸ்தவ தேவாலயத்தில் திருப்பலி பூஜையில் மெழுகுவர்த்தி பிடித்துக்கொண்டிருந்த ஒரு பெண் சரியாக பிடிக்கவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். அவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் புனித வாடிகன் போற்றும் வகையில் உயர்ந்தார். அவர் தான் அன்னை தெரசா.

காது கேட்கவில்லை, புத்தி மந்தம் என பள்ளிகளில் விரட்டப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் உலகம் போற்றும் விஞ்ஞானியானார். பல்கேரியா நாட்டின் ராணுவத்தால் தூரத்தப்பட்ட ஹிட்லர் தன்னம்பிக்கையால் மிகப்பெரிய சக்தியாக விளங்கினார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த அப்துல் கலாம் உலகம் போற்றும் விஞ்ஞானியானார்.
புரட்சித்தலைவர் தொண்டையில் குண்டடிபட்டது. ஆனால் தன்னம்பிக்கையால் குண்டும் இருந்தும்கூட பேசினார். உங்கள் லட்சியங்களை நீங்கள் தீர்மானிக்க முயற்சித்து முன்னேறுங்கள்.

ராமபிரான் 14 வருடம் வனவாசம் சென்று திரும்பி வந்தார். அப்போது அவர் முகத்தைப் பார்க்கும் போது அவர் எப்படி நாட்டை விட்டுச் செல்லும் பொழுது முகம் மலர்ந்து இருந்ததோ, அதே முகத்துடன் வந்தார். அது அவரின் தன்னம்பிக்கை. விதைத்தால் மரம், இல்லையேல் உரம்.

படிப்பை யாரும் கவுரவப் பிரச்சினையாக திணிக்கக்கூடாது, மார்க்கை ஒப்பிட்டு பேசக்கூடாது. தோல்வி என்பது வெற்றிக்கு மிகப்பெரிய எந்திரம் ஆகும். கரும்பு பிழிய பிழிய சுவை தருவது போல், நாம் மனதில் தன்னம்பிக்கை வளர வளர நாம் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம்.

நான் தமிழ் இலக்கியத்தில் படிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் எனது மாமா பி.பி.ஏ பிரிவில் சேர்த்து விட்டார். இருந்தாலும் நான் அவருக்கு தெரியாமல் நூலகம் சென்று படித்தேன். அந்தப் படிப்பு தான் அம்மாவிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் அம்மாவால் உ.வே.சா. விருதும் கிடைத்தது. இதற்கு நான் எடுத்துக்கொண்ட தன்னம்பிக்கை தான் ஆகும். படிப்பில் சாதனை படைக்க ஆயிரம் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. ஆகவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சியை மேற்கொள்ளுங்கள். இந்த உலகமே உங்கள் வசமாகும்.

இவ்வாறு நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் பேசினார்.