தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அதிகளவாக 13.6 லட்சம் பேருக்கு பரிசோதனை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

திருவள்ளூர்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகளவில் 13,06,884 பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அரசு முதன்மை செயலரும், சுகாதாரத்துறை செயலாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 2895 பேர் குணமடைந்துள்ளனர். 30 கர்ப்பிணி தாய்மார்களும் முழுமையாக குணமடைந்துள்ளனர். 92 வயது முதியவர் உள்பட 60 வயதை கடந்த அனைத்து முதியவர்கள் நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 1175 படுக்கை வசதிகளும், 310 படுக்கைகள் முழுமையாக ஆக்சிஜன் வசதிகளுடன் தயாராக உள்ளது. இதுதவிர மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3000 படுக்கை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் 60592 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகளவில் 13,06,884 பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை சோப்பு மூலம் கழுவுவது, போன்றவற்றை கடைபிடித்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு அனைவரும் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அரசு முதன்மை செயலரும், சுகாதாரத்துறை செயலாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், இணை இயக்குநர் (மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள்) இளங்கோவன், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெ.பிரபாகரன், திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜவஹர்லால், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அரசு அலுவலர்கள் உள்ளனர்.