சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மத்திய அரசின் அறிவுரைகளின்படியும், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை வழங்கியும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.