சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை – முதலமைச்சர் அறிவிப்பு

கோவை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இன்றையதினம் ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டுமென்று பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இணையவழி ரம்மி சூதாட்ட விளையாட்டினால் பலர் தற்கொலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த விளையாட்டை தடை செய்வதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அரசின் சார்பாக இதைத் தடை செய்வதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியும் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பல தரப்பட்ட மக்களினுடைய கருத்துக்களின் அடிப்படையில் இதைத் தடை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இண்டர்நெட் பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிற சூழ்நிலையில் பொதுமக்களின், குறிப்பாக இளைஞர்களின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் விதமாக ஆன்-லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுக்கள் அவர்களது வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு மட்டுமல்லாமல், சில சமயம் தங்களது உயிரையும் மாய்த்து கொள்ளும் அபாயம் அதிகரித்து வருகிறது.

பொதுமக்களின் நன்மையை கருதி இவ்வாறு பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துபவரையும், அதில் ஈடுபடுபவரையும் குற்றவாளிகளாகக் கருதி அவர்களைக் கைது செய்யும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு துரிதமாக எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.