தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து விட்டது-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை

சமூக விரோத செயல்கள் அதிகரித்து விட்டதால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து விட்டது என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேற்கு ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக பொன் விழாவை சிறப்பாக கொண்டாடவது குறித்து ஒன்றிய கழக செயலாளர் சாலை ஜி.பழனி ஏற்பாட்டில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் ஜி.பழனி வரவேற்றார்.
ஒன்றிய கழக நிர்வாகிகள் பாபு, பார்த்தசாரதி, எ.எம்.நாகராஜ், மாதவி , அமுல் ராஜ் ஞானவேல் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவும் , மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று சொன்னார். ஆனால் இன்றுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வு ரத்து என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் தேர்தலுக்கு பிறகு நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்கிறார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு. தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு. 505 பொய்யான வாக்குறுதிகள் தேர்தல் நேரத்தில் அள்ளி வீசிய ஸ்டாலின் ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க. குடும்ப இயக்கம். கழகம் தொண்டர்கள் இயக்கம்.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. கழகம் என்ற பேரியக்கத்தில் உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு அளிக்கப்படும். சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். தமிழகத்தில் இன்று சமூக விரோத செயல்கள் பெருகிவிட்டன.

சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா, குட்கா விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. சூதாட்டம், லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் பெருகிவிட்டது. இவற்றை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது.

தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் நிழல் முதலமைச்சராக திகழ்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கழகத்தின் பொன்விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட இயக்கம் கழகம்.

கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுககு கதவு தட்டி உயர்ந்த பதவிகள் வரும்.கழகத்தின் தோல்வி தற்காலிகமானது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.

கூட்டத்தில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இ.பிரகாஷ், மாவட்ட பாசறை செயலாளர் அன்பரசன்,
கழக நிர்வாகிகள் மோகனசுந்தரம், சுப்பிரமணி, ஆனந்தன், மோகனா, அசாருதீன், சத்தியநாராயணன், அன்பரசன்,
தீனதயாளன், ராமச்சந்திரன், குமரேசன், ரமேஷ்குமார், மாதவன் நாகரத்தினம், பத்மநாபன், நரேஷ்காந்த், ஹரி, நரசிம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.