சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல்உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி – முதலமைச்சர் உத்தரவு

சென்னை 

தமிழகத்தில் வரும் 10-ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் நோய்த் தொற்று தொடர்பாகச் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நோய்த் தொற்று கண்டறியப்படுபவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை மண்டல வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக மக்களைச் சந்தித்து நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள், முககவசங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிகாரிகளும், களப்பணியாளர்களும் கொரோனா நோய்த் தொற்று குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சித்த மருத்துவம் உள்ளிட்ட பன்முக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த இம்மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் மக்கள் பாதிக்க கூடாது என்ற அடிப்படையில் பல்வேறு தளர்வுகளையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி உணவகங்களில் 50 சதவீத அளவுக்கு அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கவும்,

பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவலாயங்களில் மட்டும் ஆட்சியர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க முதலமைச்சர் அனுமதித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பின்வருமாறு ஆணை பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க நேற்று முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.